ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை தரும் அரசியல் சாசனச் சட்டம் 370-வது பிரிவு தொடர்பான தனது நிலைப்பாட்டை பாஜக மாற்றிக்கொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும். அந்த பிரிவின் மூலம் காஷ்மீர் மக்களுக்கு நன்மை கிடைக்கிறது என்றால், அதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கைவிடத் தயார் என்றும் பாஜக கூறியுள்ளது.
‘370-வது பிரிவு குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. இந்த பிரிவு, மக்களுக்கு நன்மை அளிக்கிறதா என்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும். காஷ்மீரில் 370-வது பிரிவு அமலில் இருப்பதால், பெண்களுக்கு சம உரிமை கிடைக்கவில்லை. மற்ற மாநிலங்களில் உள்ள அளவுக்கு கூட ஆண் பெண் சமத்துவம் இங்கு இல்லை.
இது பெண்களுக்கு எதிரான பாரபட்சமான அணுகுமுறை இல்லையா?
பஞ்சாயத்துகளுக்கு நிதி அதிகாரத்தை அளிக்கும் 73-வது சட்டத் திருத்தத்தை காஷ்மீர் அரசு அமல்படுத்தாமல் உள்ளது. தன்னாட்சி அதிகாரம் பற்றி பேசும் தேசிய மாநாட்டுக் கட்சி, தனது ஆட்சியின் கீழ் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தை வழங்க மறுக்கிறது. மாநில அரசு ஊழலில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், மற்ற மாநிலங்களில் அமலில் இருக்கும் ஊழல் தடுப்புச் சட்டம், காஷ்மீரில் மட்டும் செயல்பாட்டில் இல்லை.
இந்திய எல்லையை ஒட்டியுள்ள சீனப் பகுதியில் வசிக்கும் கிராமத்தினருக்கு அந்நாட்டு அரசு இலவச சிம் கார்டுகளை அளித்து வருகிறது. அதே போல, நமது எல்லையில் வசிப்போருக்கு தொலைத்தொடர்புத் துறையால் சிம் கார்டுகளை வழங்க முடியாதா?” என்று அங்கு பேசிய மோடி கேள்வி எழுப்பினார்.