உள்ளாட்சி நிர்வாகத்திற்கு நியமிக்கப்பட்ட பொறுப்புகள் என்ன?
உள்ளாட்சி தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்ததால், உள்ளாட்சி நிர்வாகிகளின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து தனி அதிகாரிகள் நியமனம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் இந்த தனி அதிகாரிகளுக்கு என என்னென்ன பொறுப்புகள், கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தற்போது பார்ப்போம்
1. கிராம ஊராட்சிகளில் சாலைகள் அமைப்பது, பராமரிப்பது, சீரமைப்பது, பொது சாலைகள், பொது இடங்களில் மின்விளக்கு வசதி ஏற்படுத்துவது, சாலைகளை சுத்தமாக பராமரிப்பது, பொது கழிப்பிடங்கள், சுடுகாடுகளை தூய்மையாகப் பராமரிப்பது, பொது மக்கள் குளிக்கவும், துவைக்கவும் பயன்படுத்தும் நீர் ஆதாரங்களை பராமரிப்பது
2, பஞ்சாயத்துகள்: கிராம பஞ்சாயத்துகளில் சாலையோரங்களில் மரங்கள் நடுவது, பராமரிப்பது, பொதுவிடங்களில் மின்விளக்கு வசதி, பொது சந்தைகளைத் திறந்து பராமரிப்பது, கிராமங்களில் கண்காட்சிகள்-திருவிழாக்களை நடத்துவது, பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களை பராமரிப்பது, இறைச்சி கூடங்களைத் திறந்து பராமரிப்பது, படிப்பகங்களை சரியான முறையில் பராமரிப்பது, மைதானங்கள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் போன்ற அம்சங்களை ஏற்படுத்தி பராமரிப்பது போன்ற பணிகளை செயல்படுத்துவது
3. ஒன்றியங்கள்: ஊராட்சி ஒன்றியங்களில் மருந்தகங்களை ஏற்படுத்துவது, கிராமப்புற மருத்துவர்களுக்கு சம்பளம்-படிகள் போன்றவற்றை அளிப்பது, கர்ப்பிணி-குழந்தைகள் நல மையங்கள், ஏழைகள், கைவிடப்பட்டோருக்கு இல்லங்கள் கட்டுவது, தொடக்கப் பள்ளிகளை புதிதாக கட்டுவது, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மானியங்களை அளிப்பது, ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கண்காட்சிகள், திருவிழாக்களைக் கட்டுப்படுத்துவது, பிறப்பு-இறப்பு பதிவேடுகளைப் பராமரிப்பது, வேளாண்மை, கால்நடைகள் போன்றவற்றை மேம்படுத்துவது போன்ற பணிகளை கண்காணிப்பது.
4. பேரூராட்சிகள்-நகராட்சிகள்: குடிநீர் வழங்கல், சாலை விளக்குகள், பொது கழிப்பிடங்கள், பொது கழிவுநீரகற்றகங்கள் போன்றவற்றை ஏற்படுத்துவதுடன், அதனைப் பராமரிப்பது, தெருக்களைச் சுத்தமாகப் பராமரிப்பது, குப்பைகளை அகற்றுவது, சாலைகளில் மரங்களை நடுவது, பராமரிப்பது போன்ற பணிகள்
5.மாநகராட்சிகள்: தெரு விளக்குகள், குடிநீர் வழங்கல் பணிகள் (சென்னை மாநகராட்சியில் பெருநகர குடிநீர் வழங்கல் துறை மேற்கொள்கிறது), பொது கழிப்பிடங்கள், சாலைகளைச் சுத்தமாக பராமரிப்பது
மேற்கண்ட பணிகளை தனி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள மாநகராட்சி ஆணையாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து அந்தப் பணிகளை ஒருங்கிணைப்பர் என்று அரசு செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.