இதய பாதிப்பு… இதோ ஒரு நவீன சிகிச்சை!

 

இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால், மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். உடனடியாக இவர்களுக்கு மருந்து மாத்திரை, பலூன் ஆஞ்ஜியோபிளாஸ்டி அல்லது பாதிப்பைப் பொருத்து பைபாஸ் அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும். ஆனால், 90 சதவிகிதத்துக்கு மேல் அடைப்பு உள்ளவர்களுக்கு, இதயம் பலவீனம் ஆனவர்களுக்கு, அறுவைசிகிச்சை செய்ய முடியாத அளவுக்கு இதயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதயம் செயல் இழப்புத் தன்மை அதிகம் கொண்டவர்களுக்கு, இத்தகைய அறுவைசிகிச்சை செய்யப்படுவது இல்லை. எந்த நேரமும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலையில் வாழ வேண்டிய அவர்களின் உயிரைக் காக்க வந்திருக்கும் சிகிச்சைதான் ‘என்ஹான்ஸ்டு எக்ஸ்டர்னல் கவுன்டர் பல்சேஷன்’ Enhanced External Counter pulsation (EECP).

இந்தச் சிகிச்சை குறித்து அறிய, சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூத்த இதய அறுவைசிகிச்சை நிபுணர் சொக்கலிங்கத்தைச் சந்தித்தோம்.

‘நெஞ்சு வலி ஏற்பட முக்கியக் காரணம், இதயத்தில் உள்ள தசைகளுக்கு, போதிய அளவு ரத்த ஓட்டமும், ஆக்சிஜனும் கிடைக்காமல் போவதுதான். இதில் அதிக ஆபத்து உள்ளவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைதான், இ.இ.சி.பி. இதில் அறுவைசிகிச்சை இல்லை என்பதால், துளிக்கூட ரத்த இழப்பு இருக்காது. அறுவைசிகிச்சைக் கூடத்தில் செய்யப்படும் பைபாஸ், பலூன் ஆஞ்சியோபிளாஸ்ட்டி போன்று அல்லாமல், சாதாரணமாக, புறநோயாளியாகவே வந்து சிகிச்சை பெற்றுச் செல்லலாம்.

இதயம் செயலிழந்தவர்கள், இதய வலி, மாரடைப்பு நோய் போன்ற பிரச்னை உள்ள  நோயாளிகள், இந்த முறையால் பயனடையலாம். அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அங்கீகாரம் பெற்றது இந்தச் சிகிச்சை. எல்லா இதய நோயாளிகளுக்கும் இந்தச் சிகிச்சை செய்யப்படுவதும் இல்லை. இதயக் குழாய் வால்வு பிரச்னை, காலில் நீர் வீக்கம், படுத்தால் மூச்சு வாங்கும் பிரச்னை, சிறுநீரகக் கோளாறு, மெல்லிய ரத்தக் குழாய்கள் போன்ற பிரச்னைகள் உள்ள நோயாளிகளுக்கு, இந்தச் சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை’ என்றவர், சிகிச்சை அளிக்கப்படும் விதம் பற்றி விளக்கினார்.

‘இந்தச் சிகிச்சையின் மூலம் காலில் உள்ள ரத்தம் இதயத்துக்கு பம்ப் செய்யப்படும். சிகிச்சைக்கு வருபவர்களை, பிரத்யேகப் படுக்கையில் படுக்கவைத்து, காற்றுப்பைகளை காலின் கெண்டைச் சதை, கீழ்த் தொடை, மேல் தொடை என மூன்று இடங்களில் கட்டுவோம். இதயம் விரிவடையும் நேரத்தில், காற்றுப்பைகளில் அழுத்தம் கொடுக்கப்படும். இதனால் இதயத்துக்கு ரத்தம் எளிதில் வந்து சேருகிறது. இதயம் சுருங்கும் நேரத்தில் காற்றுப் பைகள் திறக்கப்பட்டு, அழுத்தம் குறைக்கப்படும். இதனால் எளிதில் ரத்தம் வெளியேற்றப்படுகிறது. இந்தச் செயல்முறையின் மூலம் இதயத்தின் முக்கிய ரத்தக் குழாயான, ‘மகா தமனி’யில் ரத்த அழுத்தம் அதிகரித்து ரத்தமானது, இதயத் தசைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் மிக அழுத்தமாகப் பாய்கிறது. இதனால் அடைப்பையும் மீறி ரத்தம் வேகமாக இதயத் தசைக்குச் செல்கிறது.

இப்படித் தொடர்ந்து செய்யும்போது, இதயத்துக்கு ரத்தம் செல்லும் குழாயில், பல புதிய குழாய்கள் உருவாகி ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகின்றன. நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் மறைகின்றன. இந்தச் சிகிச்சையைச் செய்யும்போது, இதயத்தை ஈ.சி.ஜி. கருவி மூலம் கண்காணிக்கப்படுவதால் பாதுகாப்பானது. இந்தச் சிகிச்சையை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வீதம், 35 நாட்களுக்குச் செய்து வர வேண்டும். வாரத்துக்கு ஆறு நாட்கள் இந்தச் சிகிச்சை அளிக்கப்படும். சிகிச்சைக்குப் பிறகு ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி செய்துவந்தால், அடுத்த 20 ஆண்டுகளுக்கு இதயப் பிரச்னைகள் இன்றி வாழ முடியும்’ என்றார் டாக்டர் சொக்கலிங்கம்.

Leave a Reply