வேகத்தடைக்குப் பதில் 3D படங்கள்: நிதின் கட்கரியின் புதிய யோசனை
சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் சில சமயம் இந்த வேகத்தடையால் விபத்தும் ஏற்பட்டுவிடுகிறது. எனவே இதனை தவிர்க்கும் வகையில் சாலைகளில் வேகத்தடைக்கு பதிலாக 3D படங்கள் வரையலாம் என மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி யோசனை கூறியுள்ளார். இந்த யோசனைக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் நிதின்கட்காரி தனது ஃபேஸ்புக் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:”நாம் அநாவசியமான வேகத்தடைகளுக்கு பதிலாக அதனைப் போன்று 3டி படங்களை சாலையில் தத்ரூபமாக வரைந்து வைக்க முயற்சித்து வருகிறோம்’ என்று கூறியுள்ளார். இந்தியாவில் தற்போதுதான் சாலைகளில் 3D படங்கள் வரையும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் 14 ஆண்டுகளாக இந்த நடைமுறை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நிதின்கட்காரியின் இந்த யோசனைக்கு ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ”நெடுஞ்சாலைகள், எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் போன்றவற்றில் இதுபோன்ற 3D படங்களை வரைந்து விட்டால், வேகத்தடைகள் அமைக்க வேண்டிய நிலை இருக்காது என்றும், வேகமாக செல்லும் வாகனங்கள் தூரத்தில் இருந்தே இதை பார்க்க முடியும் என்பதால், வேகத்தடையால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முடியும்” என்றும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.