ஜி.கே.வாசனை மீறி ஜெயலலிதாவுக்கு ஆர்.கே.நகரில் ஆதரவு கொடுத்த எஸ்.ஆர்.பி. தமாகவில் பரபரப்பு

gk vasanதமாகாவின் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும்” என்று அனைத்து கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 மாதங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் ஜனநாயகக் கடமையை முறையாக நிறைவேற்றுவதற்காக முதல்வர் ஜெயலலிதா அங்கு போட்டியிடுகிறார்.

இங்கிலாந்து நாட்டில் மக்கள் சபையின் தலைவரை போட்டியின்றி தேர்ந்தெடுக்கும் மரபு பின்பற்றப்படுகிறது. அதுபோல ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உயரிய மரபை ஏற்படுத்தும் வகையில் ஜெயலலிதாவை போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலை தமாகா புறக்கணிப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ள நிலையில், தற்போது அந்த கட்சியின் இன்னொரு தலைவர் ஜெயலலிதாவை போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு முன்னர் எஸ்.ஆர்.பி காங்கிரஸில் இருக்கும்போது தலைமையின் கருத்தை கேட்காமல் அவர் இஷ்டத்திற்கு அறிக்கை விட்டு வந்ததாகவும், அந்த கலாச்சாரத்தை அவர் தற்போது தமாகாவிலும் கடை பிடிப்பதாகவும் அக்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள ஜெயலலிதாவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துக் கொண்டுள்ளார். நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஜெயலலிதாவின் முதல்வர் பணி தொடர வேண்டும் என்றும் அவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் எடியூரப்பா கூறியுள்ளார்.

Leave a Reply