ஸ்ரீ பாண்டவதூத பெருமாள், திருபாடகம், காஞ்சிபுரம்.. 108 திவ்யதேசங்களில் ஒன்றான இந்த கோவில் பெருமாள் சுமார் 25 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறார்..பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவருக்கு தூது சென்ற காரணப்பெயர் கொண்டபெருமாள், இப்போது இந்தப்படத்தினை உத்சவர்மூர்த்தியோடு இணைத்து செய்துள்ளேன் ..மூலவர் பெருமாள் திருவுருவம் எனக்கு பல முயற்ச்சிகள் செய்தும் தெளிவாகவும் முழுமையாகவும் கிடைக்காததால் ஒரு அருமையான வரையப்பட்ட ( திரு. பத்மவாசன் அவர்களால் வரையப்பட்டது என்று நினைக்கிறேன்) திருவுருவத்தினை கொண்டு செய்துள்ளேன்.
இந்த கோவிலைப்பற்றி கீழே உள்ள தகவல்கள் தினமலர் இணையதளத்தின் ” கோவில்கள் ” என்ற பிரிவில் உள்ளன,
கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 49 வது திவ்ய தேசம்.
கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளும் தலம். எனவே இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் 72,000 அங்க நாடிகளும் துடிப்புடன் செயல்பட்டு சோதனைகளும், துன்பங்களும் விலகும்.புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பு.
கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால் பாண்டவ தூதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டுக்களில் தூதஹரி என குறிக்கப்படுகிறார். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார். இத்தலத்தில் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற ஆசாரியார் எழுந்தருளியுள்ளார். இவர் யக்ஞமூர்த்தி என்ற பெயருடன் ராமானுஜருடன் 18 நாள் வாதம் செய்து, அவரைச் சரணடைந்து, பின் அநேக மகான்களுக்கு ஆச்சாரியராக விளங்கினார். மணவாள மாமுனிகள் இங்கு எழுந்தருளியுள்ளார்.
ரோகிணி நட்சத்திரம்: ரோகிணி தேவி கிருஷ்ண பகவானை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். சந்திரன் தனது 27 நட்சத்திர தேவியர்களில் முதலில், ஞான சக்திகளை கொண்ட ரோகிணியையும், அக்னி சக்திகளை கொண்ட கார்த்திகையையும் மணந்த பிறகே ஏனைய நட்சத்திர தேவியர்களை மணந்தார். ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனமும் கொடுத்த கிருஷ்ணனை இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம்.
மங்களாசாசனம் : பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார்