வரங்களை வாரி வழங்கும் ஸ்ரீகற்பக விநாயகர் கோயில்

vinayagar‘உலகில் எந்தக் கடவுளுக்கு அதிக கோயில்கள் உள்ளன?’ என்று கேட்டால், பிள்ளையாருக்கு என்று எல்லோருமே சரியாகப் பதில் சொல்லிவிடுவார்கள். ஆம்… ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோயில்கள் இருக்கின்றன.

எந்தக் காரியத்தைத் துவங்குவதாக இருந்தாலும், முதலில் பிள்ளையாரை வணங்கிவிட்டே காரியத்தில் இறங்குவோம். கடிதம் எழுதுவது முதல், மளிகைப் பொருட்கள் வாங்குதற்குப் பட்டியல் போடுவது வரை எதுவாக இருந்தா லும், முதலில் பிள்ளையார் சுழி போட்டு விட்டு எழுதுவதை நம்மில் பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

சிவனாருக்குச் செய்யப்படுகிற பூஜையா கட்டும், பெருமாளை வணங்குகிற சகஸ்ரநாம பூஜைகளாகட்டும், ஹோமங்களாகட்டும்… எதுவாக இருந்தாலும், கொஞ்சம் மஞ்சளை எடுத்துப் பிடித்துவைத்து, விரல் அளவுக்கு நிற்க வைத்து, அதை மஞ்சள் பிள்ளையார் என மனமார எண்ணி, பூக்கள் தூவி நமஸ்கரித்து, கணபதி பூஜை செய்த பிறகே, நாம் செய்ய வேண்டிய மற்ற பூஜை- ஹோமங்களைச் செய்வோம். அந்த அளவுக்கு நம் வாழ்வில் இரண்டறக் கலந்த இறைத் திருமேனிகளில், விநாயகப் பெருமானுக்குத் தனி இடம் உண்டு!

சேலம் மாவட்டம், ஆத்தூருக்கு அருகில் உள்ளது கோவிந்தம்பாளையம். இங்கே, மிக அழகாக அமர்ந்து, தன்னை நாடி வருவோர்க்கெல்லாம் நலமும் வளமும் வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார் ஸ்ரீவிநாயகப் பெருமான்.

ஆத்தூர், சின்னசேலம், கள்ளக் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலேயே மிகப் பெரிய பிள்ளையார் கோயில் இது என்று போற்று கின்றனர் பக்தர்கள்.

சுமார் 500 வருடங்கள் பழைமைமிக்க ஆலயம் இது. சுற்றுவட்டார ஊர்க்காரர்கள் நெல் விதைப்பதில் துவங்கி, திருமணம், குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பது என எந்த ஒரு நல்ல நிகழ்வுக்கும் இங்கு வந்து ஸ்ரீகற்பக விநாயகரை வணங்கிவிட்டுத்தான் காரியத்தில் இறங்குவார்களாம்.

விதை நெல்லை எடுத்து வந்து ஸ்ரீவிநாயகரின் துதிக்கையில் வைத்து மனதாரப் பிரார்த்தனை செய்துவிட்டு, பின்பு அதை எடுத்துச் சென்று விதைத்தால், அந்த முறை அமோக விளைச்சல் நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள்.

அதேபோல், கல்யாணம் தடைப்பட்டு நீண்ட காலமாகத் தவிப்பவர்கள், இங்கு வந்து தங்களின் ஜாதகத்தை வைத்து, ஸ்ரீகற்பக விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி உள்ளம் உருக வேண்டிக்கொண்டால், விரைவில் திருமணம் நடந்தேறும்; நல்ல வரன் அமைந்து, வாழ்க்கை இனிக்கும் என்பது ஐதீகம்.

மிகுந்த வரப்பிரசாதியான விநாயகர் இவர். தன் திருநாமத்துக்குத் தகுந்தது போலவே, தன்னை நாடி வரும் அன்பர்களுக்கெல்லாம் கற்பக விருட்சமென வரங்களை வாரி அருள்வார் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

மிகப் பெரிய பிராகாரத்தையும், மூலவராக ஸ்ரீகற்பக விநாயகரையும் கொண்டு அற்புதமாக அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலில் ஸ்ரீவள்ளி ஸ்ரீதெய்வானை தேவியருடன் அழகுற அருள்பாலிக்கிறார் ஸ்ரீசுப்ரமணியர்.

சதுர்த்தி திருநாட்களில் ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கும், சஷ்டி திருநாட்களில் ஸ்ரீமுருகக் கடவுளுக்கும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து இறைவனைத் தரிசித்து, பிரார்த்தனை செய்கின்றனர். பிறகு, வேண்டுதல் நிறைவேறியதும், தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துவதற் காகக் குடும்பத்துடன் வந்து வணங்கிச் செல்வார்களாம்.

‘எத்தனை கவலைகள் இருந்தால் என்ன… ஸ்ரீகற்பக விநாயகரிடம் வந்து நம் மனக் குறையைச் சொல்லிவிட்டால் போதும்; விரைவில் காரியங்கள் யாவும் நிறைவேறி, நம் கவலைகள் யாவும் அகன்றுவிடும்’ என்பது அவர்களின் அழுத்தமான நம்பிக்கை.

”சுமார் 80 வருடங்களுக்கு முன்பு வரை, விநாயக சதுர்த்தி அன்று விசேஷ பூஜைகள், கணபதியப்பனுக்கு அலங்காரங்கள் என அமர்க்களப்பட்டது இந்தக் கோயில். மகா கணபதி மந்திரங்கள் ஜபித்து, ஹோம குண்டங் கள் வளர்த்து, அதிக எண்ணிக்கையில் மோதகங்கள் படைத்து வெகுவிமரிசையாக நடைபெற்றது விநாயக சதுர்த்தி விழா.

காலப்போக்கில் பராமரிப்பின்றி, பொலிவை இழந்தது கோயில். பிராகாரங்கள் குண்டும் குழியுமாக மாறின. சந்நிதிகள் முள்ளும் புதருமாகக் காட்சி அளித்தன. கோயில் சிதிலம் அடைந்த நிலைக்கு வந்ததால், பக்தர் களின் வருகை படிப்படியாகக் குறைந்து, ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நின்றுபோனது.

சக்தி மிக்க இந்த கணபதி ஆலயம் மீண்டும் பொலிவுக்கு வரவேண்டும்; இங்கே தடையின்றி பூஜைகளும் விழாக்களும் நடைபெற வேண்டும் என்பதற்காக, ‘ஸ்ரீகற்பக விநாயகர் திருக்கோயில் கமிட்டி’ என்ற பெயரில் டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து, திருப்பணிகளைத் துவக்கி உள்ளோம்.

அன்பர்களின் உதவியால், விரைவில் கும்பாபிஷேகமும் செய்துவிட்டால், அதைவிட நிம்மதியும் சந்தோஷமும் எங்களுக்கு வேறு எதுவும் இல்லை” என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொல்கிறார் டிரஸ்டி முருகேசன்.

தற்போது கோபுரம், முன்மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை எனத் திருப்பணிகள் துவங்கப்பட்டு, மளமளவென நடந்துவருகின்றன.

ஸ்ரீகற்பக விநாயகரின் விமானம், மகா மேரு முறையில் கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெண்ணிறக் கற்களைக் கொண்டு, வட மாநிலங்களில் அமைந்திருப்பதுபோல, இங்கே கோவிந்தம் பாளையத்தில் ஸ்ரீகற்பக விநாயகரின் திருக் கோயில் மிக அழகுற கட்டப்பட்டு வருகிறது.

”வேகமாக நடந்துவந்த பணிகள், தற்போது நிதிப் பற்றாக்குறையால் தொய்வடைந்துள்ளன. அன்பர்களின் பேருதவிக்காகத் திருப்பணிகள் காத்திருக்கின்றன. சீக்கிரம் திருப்பணி

நடந்து, கோயில் பழைய பொலிவுக்கு வர வேண்டும்; கும்பாபிஷேக விழா சீரும் சிறப்புமாக நடைபெறவேண்டும்” என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர் கோவிந்தம் பாளையம் ஊர்மக்கள்.

ஆனைமுகத்தானின் கோயில், அழகுபெற வேண்டும்தானே! அவனுடைய அருள் நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்க, ஸ்ரீகற்பக விநாயகர் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு நம்மால் முடிந்ததைச் செய்வதுதானே ஒவ்வொரு பக்தனின் கடமையாக இருக்கும்!

விவசாயம் மெள்ள மெள்ளக் குறைந்து வரும் இந்தக் காலகட்டத்தில், விவசாயத் தையும் விளைச்சலையும் தழைக்கச் செய்யும் ஸ்ரீகற்பக விநாயகரின் கோயில், களை இழந்து  காணப்படலாமா?

தடைப்பட்ட கல்யாணத்தையும், ஞானத்தை யும் வழங்கக்கூடிய பிள்ளையார் கோயில், மீண்டும் பிரமாண்டமான பிராகாரம், அழகிய சந்நிதிகள் என அழகு மிளிரத் திகழ்ந்தால்தானே, அங்கே சாந்நித்தியம் எப்போதும் குடிகொண்டிருக்கும்?

கோவிந்தம்பாளையம் ஸ்ரீகற்பக விநாயகப் பெருமான் குடிகொண்டிருக்கும் திருக் கோயிலுக்கு உங்கள் பங்களிப்பைத் தாருங்கள். விருட்சமென உங்கள் சந்ததி சிறக்கும்; செழிக்கும்!

எங்கே இருக்கிறது?

சேலம் மாவட்டத்தில், விழுப்புரத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில், கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலத்துக்கு அருகில் அமைந்துள்ளது ஆத்தூர். இந்த ஊரில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவில் உள்ளது கோவிந்தம்பாளையம். தலைவாசலில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவு. இந்த கிராமத்தில்தான் சுமார் 500 வருடப் பழைமை வாய்ந்த ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.

Leave a Reply