இலங்கையில் தொடரும் கனமழை: பலி எண்ணிக்கை 250ஆக உயர்வு
இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்து வருவதால் மிகப்பெரிய உயிரிழப்பும் பொருள் இழப்பும் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளத்திற்கு இதுவரை 250 பேர் பலியாகியுள்ளதாகவும், மீட்புப்பணிகள் முடிந்தவுடன் பலி எண்ணிக்கை அதிகரித்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் வீடிழந்தும், லட்சக்கணக்கானோர் வீடுகளில் மின்சாரம் இல்லாமலும் இருப்பதால் இலங்கையில் உள்ள மொத்த மக்களுக்கும் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.
இந்த நிலையில் மேலும் சில நாட்களுக்கு இலங்கையில் கனமழை நீடிக்கும் என்ற வானிலை அறிக்கையின் தகவல் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றுள்ளது.
இனிமேலும் மழை தொடரும்பட்சத்தில் மோசமான பாதிப்பை இலங்கை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக காலே, ரத்தினபுரி, காவத்தை, பெல்மதுளை, எஹலியகொட, குருவிட்ட, நிவித்திகல, எலபாத்த, கலவான, பதுல்பான, கிரியெல்ல, இறக்குவானை ஆகிய பகுதிகள் இன்னும் ஒருசில செண்டிமீட்டர் மழையை கூட தாங்க முடியாத அளவிற்கு மிக அபாயகரமான கட்டத்தில் உள்ளது.