இலங்கை நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்க இலங்கையின் புதிய அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஜபக்சேவின் ஆட்சியில் இலங்கையின் ராணுவ தளபதியாக பணியாற்றிய சரத் பொன்சேகா, விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கி பிரபாகரன் உள்பட விடுதலைப்புலிகள் பலர் மரணமடைய காரணமாக இருந்தார். ஆனால் திடீரென ராஜபக்சேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாம கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் அவர் தேர்தலில் தோல்வி அடைந்ததால் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அவரது குடியுரிமை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் பறிக்கப்பட்டன.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள நிலையில், சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு அளித்து சிறிசேனா தலைமையிலான புதிய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட குடியுரிமை, பட்டங்கள், பதக்கங்கள் ஆகியவற்றை திரும்ப அவருக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொன்சேகாவுக்கு ராணுவத்தில் மீண்டும் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.