தமிழர்களின் நிலங்கள் திருப்பி தரப்போவது எப்போது? இலங்கை அமைச்சர் தகவல்
இலங்கையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறுதிப்போர் நடைபெற்ற போது தமிழர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஏராளமான நிலம் அனைத்தும் வரும் 2018-ம் ஆண்டுக்குள் திருப்பித் தரப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் 32-வது கூட்டத்தில் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா கூறியதாவது:
விடுதலைப்புலிகள் அமைப்பினருடனான போரின்போது தமிழர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலம் முழுவதையும் வரும் 2018-ம் ஆண்டுக்குள் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, 701 ஏக்கர் நிலம் கடந்த வாரம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் 201.3 ஏக்கர் நிலம் அதன் உரிமையாளர்களிடம் கடந்த 25-ம் தேதி திருப்பித் தரப்பட்டுள்ளது.
அதேநேரம் வளர்ச்சிப் பணிகளுக்காக தேவைப்படும் நிலங்களின் உரிமையாளர்களுக்கு அதற்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது, மனித உரிமை மீறல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து நேர்மையான விசாரணை நடத்தப்படும்.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் நல்லிணக்க நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை ஓரே இரவில் நடத்திவிட முடியாது. இதைச் செயல்படுத்த தீவிர முயற்சியும் கடின உழைப்பும் அவசியம். இந்த விவகாரத்தில் கவனமாக, தொடர்ச்சியாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.