5 மீனவர்கள் விவகாரத்தில் திடீர் திருப்பம். இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை சம்மதம்.

5 fishermenகடந்த சில நாட்களுக்கு முன்னர் போதை பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 5 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது. 5 அப்பாவி மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் போராடி வரும் நிலையில் இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் தொடர்பு கொண்டு பேசினார்.

தொலைபேசி மூலம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தது என்றும்,  தமிழக மீனவர்கள் 5 பேர்களையும் இந்திய சிறைக்கு மாற்றவும், அது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கவும் ராஜபக்சே சம்மதித்துவிட்டதாகவும் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராஜபக்சேவுடன் பாரத பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதை இலங்கை அரசும் உறுதி செய்துள்ளது. இலங்கை வெளியுறவுத் துறை இணை அமைச்சர் நியோமல் பெரேரா, இதுகுறித்து கூறியதாவது: இருதலைவர்களும் பேசிய பேச்சுவார்த்தையின்  விவரம் தமக்கு முழு அளவில் தெரியவில்லை என்றும், இருப்பினும் இந்தியா – இலங்கை இடையேயான நல்லுறவு தொடர்வதாகவும், பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் அக்கறையும், கவலையும் கொண்டுள்ளதாகவும், அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் என்பதில் இலங்கை நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே போதை பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில்  5 தமிழக மீனவர்களுக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

Leave a Reply