5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு. இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு. ராமேஸ்வரத்தில் பதட்டம்

5 fisherman தமிழக மீனவர்கள் 5 பேர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் அருகேயுள்ள தங்கச்சி மடம் பகுதியில் நடந்த வன்முறை போராட்டத்தில் ஒரு பேருந்து தீவைத்து எரிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் போதை பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.  கடந்த மூன்று வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி பத்மா சூரசேன நேற்று தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய 5 பேர் உள்பட மொத்தம் 8 பேர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

rameshwaram bus fire01

இலங்கை கடற்படையினர் போட்ட பொய்வழக்கில் தமிழக மீனவர்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது என்றும் இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் உடனடியாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் சங்க பிரதிநிதி பாரதி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து துளியும் கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்துள்ள அவர், இனிமேலாவது மத்திய அரசு தலையிட்டு தூக்குத்தண்டனையை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என   பாரதி வலியுறுத்தி உள்ளார்.

இதனிடையே, தூக்குத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக மீனவர்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நவம்பர் 14ஆம் தேதிக்குள் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த அதிர்ச்சி தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர். தங்கச்சி மடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின்போது, பேருந்து ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டது.

Leave a Reply