சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்ற சிறிசேனா மைத்ரிபாலாவின் சகோதரரை அவருடைய நண்பரே கோடரியால் வெட்டி கொலை செய்ததால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் தம்பி பிரியந்தா சிறிசேனா. இவர், பொலன்னருவா மாவட்டத்தில் மணல் குவாரி தொழிலை நடத்தி வருகிறார். பொலன்னருவாவில் குடும்பத்துடன் வசித்து வரும் அவருக்கு நெருங்கிய நண்பராக இருந்து வரும் லக்மல் என்பவரது வீடு பாகமுனா என்ற இடத்தில் உள்ளது. நேற்று இரவு பிரியந்தா தனது நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்ததாகவும் அங்கு அவருக்கும், நண்பர் லக்மலுக்கும் இடையே திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதாகவும், அந்த சமயத்தில் லக்மல் அருகில் இருந்த ஒரு கோடரியை எடுத்து, பிரியந்தாவின் தலையில் லக்மல் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிரியந்தா சிறிசேனாவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
படுகாயம் அடைந்த பிரியந்தா, பொலன்னருவாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் கொழும்பு நகருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்துவிட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பிரியந்தாவை வெட்டிய அவருடைய நண்பர் லக்மல் பாகமுனா போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அதிபர் சிறிசேனா தற்போது சீனாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சகோதரரின் மரணச்செய்தி கேட்டு அதிபர் உடனடியாக அவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.