ராகு தோஷம் போக்கும் மயிலாப்பூர் ஸ்ரீகோலவிழி அம்மன்

kolavizhi ammanசென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ளது ஸ்ரீபத்ரகாளியம்மன் மற்றும்  ஸ்ரீகோலவிழி அம்மன் கோயில். வேப்ப மரமும் அரச மரமும் பின்னிப் பிணைந்திருக்கிற ஆலயம் இது. அம்மன் வடக்கு நோக்கிக் காட்சி தருகிறாள். எனவே, சிறப்புக்கு உரிய தலம் இது எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

ஸ்ரீபத்ரகாளி உக்கிர தெய்வம். எனவே, அவளைக் குளிர்விக்க, கோலவிழி அம்மனின் விக்கிரகத்தை வைத்து வழிபடுவதாகச் சொல்கின்றனர். எனவே, அபிஷேகம் முழுவதும் கோலவிழி அம்மனுக்கே! ஸ்ரீபத்ரகாளி அம்மனுக்கு, தைலக்காப்பு மட்டுமே சார்த்தப்படுகிறது.

இங்கே, பூட்டுப் பிரார்த்தனை விசேஷம். அதாவது, பக்தர்கள் தங்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்னை நேர்ந்தாலும், அம்மனின் காலடியில் பூட்டு வைத்து பூஜித்துவிட்டு, பிறகு இந்த வேலியில் பூட்டிவிட்டு, சாவியை அம்மனின் திருவடியில் வைத்துவிட்டால் பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகம்!

ஆடி மாதத்தில் தீச்சட்டி ஏந்தியும் பால் குடம் எடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அப்போது, விளக்கு பூஜையும் கூழ் வார்த்தலும் சிறப்புற நடைபெறுகிறது.

ராகு தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து வேண்டிக் கொண்டால், விரைவில் தோஷம் நீங்கும்; தொடர்ந்து ஒன்பது வாரங்கள் அம்மனைத் தரிசித்து, அபிஷேகம் செய்தால், நற்பலன்கள் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம்.

இங்கு உள்ள சப்த கன்னியர் சந்நிதியில், ஸ்ரீவாராஹி அம்மனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால், தீராத நோயும் தீரும். இந்தத் தலத்துக்கு வந்து வீரமாமுனிவர் வழிபட்டதால், வீரமாமுனிவருக்கும் சந்நிதி உள்ளது.

ஸ்ரீஅனுமன், ஸ்ரீகருப்பண்ண சாமி, ஸ்ரீநடன காளி, ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீகணபதி, கோலவிழியம்மன் ஆகிய உற்ஸவ மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.

Leave a Reply