தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்குள் நுழைந்தால் கைது செய்ய இலங்கை ராணுவம் தயாராக இருப்பதாக இலங்கையின் ராணுவ செய்தித்தொடர்பாளர் ருவான் வணிகசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களுடைய படகுகள் உள்ளிட்ட பொருட்களை இலங்கை ராணுவம் சேதப்படுத்துவதை கண்டித்தும், வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி ஒட்டுமொத்த தமிழக மீனவர்களும் இணைந்து கச்சத்தீவை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் ருவான் வணிக சூரிய ‘கச்சத்தீவு என்பது இலங்கையின் ஒரு பகுதி. கச்சத்தீவிற்குள் நுழைய முயற்சி செய்யும் தமிழக மீனவர்களை கைது செய்ய இலங்கை ராணுவம் தயார் நிலையில் உள்ளது. இதற்காக கூடுதல் இலங்கை ராணுவ வீரர்கள் கச்சத்தீவு அருகே நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் கச்சத்தீவை முற்றுகையிடுவதாக எச்சரிப்பது புதிதல்ல என்று தெரிவித்துள்ள அவர் தினந்தோறும் சர்வதேச கடல் எல்லையை மீறுவது தமிழக மீனவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டதாகவும் அவர்களுக்கு விரைவில் தகுந்த பாடம் கற்பிப்போம் என்றும் கூறியுள்ளார்.