ஜெயலலிதாவின் யோசனைக்கு பாராட்டு தெரிவித்த இலங்கை அரசு
இலங்கை கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் அடிக்கடி மீன் பிடித்து வருவதாக புகார் கூறப்பட்டு வரும் நிலையில் மீன்பிடி குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த யோசனைக்கு இலங்கை அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்கள் சுருக்குமடி வலைகள் பயன்படுத்துவதைப் படிப்படியாகக் குறைத்து, ஆழ்கடல் மீன்பிடிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதே முதல்வர் தெரிவித்த யோசனை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இலங்கை அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கருத்தை ஆதரித்து, அவருக்கு நன்றி தெரிவித்து இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா கடிதம் எழுத திட்டமிட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு நகரில் செய்தியாளர்களை சந்தித்த மகிந்தா அமரவீரா “தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருக்கும் யோசனை, சர்வதேச மீன்பிடி விதிமுறைகளுக்கு ஏற்ற வகையில் உள்ளது.
சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது, எல்லை தாண்டி மீன் பிடிப்பது ஆகிய காரணங்களால் இந்திய மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து வருகிறது. கடந்த ஓராண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
முன்னதாக, பாக் நீரிணை பகுதியில் துனா ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தினால், சுருக்குமடி வலைகள் பயன்படுத்துவது குறையும் என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த ஜூன் 14-ஆம் தேதி கூறியிருந்தார்.
மேலும், ஆழ்கடலில் மீன் பிடிக்க உதவும் துனா மீன்பிடிப் படகுகளை வாங்குவதற்கு மீனவர்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதற்காக, மத்திய அரசு ரூ.975 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.