மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் மைத்திரிபாலா சிறிசேனா இன்று திருப்பதிக்கு வருகை தரவுள்ளார். எனவே திருப்பதி- திருமலை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர்களை சந்தித்துவிட்டு இன்று பீகாரில் உள்ள புத்தகயாவுக்கு சென்றுள்ள இலங்கை அதிபர் மைத்திரிபாலா சிறிசேனா, அடுத்து விமானம் மூலம் திருப்பதி செல்லவுள்ளார். அவருடன் அவரது குடும்பத்தினர்களும் வருகை தரவுள்ளனர்.
இலங்கை அதிபர் வரும் விமானம் இன்று இரவு 7.45 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வரவுள்ளதாகவும், அங்கிருந்து கார் மூலம் அவர் திருமலைக்கு சென்று அங்குள்ள ஸ்ரீகிருஷ்ணா என்ற விடுதியில் தங்கவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாளை அதிகாலை 2.30 மணி அளவில் சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசிக்கும் சிறிசேனா குடும்ப உறுப்பினர்கள் அதன் பின்னர் ஏழுமலையானையும் தரிசனம் செய்யவுள்ளனர். தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் ரேணிகுண்டா வந்து அங்கிருந்து இலங்கை திரும்புகின்றனர்.
இலங்கை அதிபரின் திருமலை வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதிபர் செல்லும் வழிநெடுகிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்படுகிறார்கள்.