நேற்று சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன், உளவு பார்த்ததற்காக ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய விபரம் அவரது வங்கி கணக்கு மூலம் நிரூபணமாகியுள்ளது..
தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் நேற்று சென்னையில் பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன் என்பவரை கைது செய்தனர். இலங்கை அரசால் தேடப்படும் குற்றவாளியான இவர் இலங்கை தலைநகர் கொழும்புவை சேர்ந்தவர் என்றும் இவரது தந்தை கொழும்பில் சொந்தமாக ஓட்டல் ஒன்றை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் போர் மூண்டபோது, அருண் செல்வராசன் தனது பெற்றோருடன் சென்னை வந்துள்ளார். 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சென்னை பள்ளியில் படித்த அருண் செல்வராசன், கடந்த 2008 ஆம் ஆண்டு மீண்டும் கொழும்பு சென்று அங்கு படிப்பை தொடர்ந்துள்ளார். அதன்பின் கடந்த 2012ஆம் ஆண்டுக மீண்டும் அருண் செல்வராசன் சென்னை வந்துள்ளார்.
செல்வராசன் தங்கியிருந்த வீட்டில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் அவரது வங்கி கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த கணக்கில் ரூ.2 கோடி வரை பணம் இலங்கையில் இருந்து ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் இவருக்கு உளவு பார்த்ததற்கான சம்பளமாக இருக்கும் என புலனாய்வு போலீசார் கருதுகின்றனர்.