இரண்டு நாள் பயணமாக இலங்கை அதிபர் சிறிசேனா இந்தியா வருகை
இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இரண்டு நாட்கள் பயணமாக இன்று பிற்பகல் இந்தியா வந்துள்ளார். தலைநகர் டெல்லியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அதிபருக்கு விருந்து அளிக்கிறார். அப்போது இருநாட்டு உறவு குறித்து மோடியு-சிறிசேனா பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
பின்னர் நாளை காலை மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாஞ்சிக்கு பயணம் செய்யவுள்ள சிறிசேனா, அங்கு இலங்கை மகாபோதி சொசைட்டி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் அங்காரிகா தர்மபாலா சிலையை அவர் திறந்து வைக்கிறார்.
அதன்பின்னர், உஜ்ஜயினி நகருக்கு செல்லவுள்ள சிறிசேனா, அங்கு நடைபெறும் மகா கும்பமேளா நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார். அங்கிருந்து டெல்லி திரும்பும் அவர் கொழும்பு நகருக்கு இரவே புறப்பட்டு செல்கிறார்.
மைத்ரிபாலா சிறிசேனாவின் இந்திய பயணம் இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வருப் நம்பிக்கை தெரிவித்தார்.