செல்போன் தயாரிப்பை நிறுத்தியது ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா. ரூ.9 லட்சம் வரை ஊழியர்களுக்கு இழப்பீடு.

nokiaஸ்ரீபெரும்புதூரில் இதுவரை இயங்கி வந்த நோக்கியா மொபைல் நிறுவனம் செல்போன் தயாரிக்கும் பணிகளை இன்றுடன் நிறுத்திவிட்டது.

பின்லாந்தை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் கிளைகளை கொண்டுள்ள நோக்கியா நிறுவனம் கடந்த 2006ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தயாரிப்பை தொடங்கியது. நல்ல லாபத்துடன் இயங்கி வந்த இந்த நிறுவனம் திடீரென வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியதால் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 5,600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு என்கிற பெயரில் அதிரடியாக விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

இந்நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் நோக்கியா நிறுவனம் மூடப்படும் என  நோக்கியா நிறுவனம் அறிவித்திருந்ததை அடுத்து இன்று முதல் செல்போன் தயாரிக்கும் பணிகளை நோக்கியா நிறுவனம் நிறுத்தியுள்ளது.

இதனால் வேலையிழந்துள்ள சுமார் 900 தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நோக்கியா நிர்வாகம், தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

அதன்படி தொழிலாளர்களுக்கு, நோக்கியா நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவத்திற்கு ஏற்ப 7.5 லட்சத்தில் இருந்து 9 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும் என தெரிகிறது.

Leave a Reply