ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் மற்ற கட்சிகளின் நிலைப்பாடு பெரும் குழப்பத்தில் இருந்து வருகிறது.
பாமக, மதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தபோவதில்லை என்று அறிவித்துவிட்ட நிலையில் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இன்னும் தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று தங்கள் கட்சியின் வேட்பாளரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மார்க்கிஸ்ட் கம்யூனிஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் திருச்சி மாநகர மாவட்ட செயலாளரான க.அண்ணாதுரை போட்டியிடுவார் என கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
வேட்பாளர் அறிவிப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், “மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.