திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீஅரங்கநாத சுவாமி திருக்கோவிலில், 43 உப சன்னிதிகள் மற்றும் 11 கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நரசிம்ம பட்டாச்சாரியார்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழகத்தின் தனிப்பெரும் கோவில் திருவரங்கம். மங்களாசாசனம் செய்யப் பெற்ற, 108 வைணவ திவ்ய தேசங்களில், முதன்மையான தலம். வைணவர்களுக்கு கோவில் என்றால், திருவரங்கம் தான். ஆழ்வார்கள் (மதுரகவி ஆழ்வார் தவிர) அனைவரும், அரங்கனைப் போற்றி மகிழ்ந்த திருத்தலம்.
வைணவ ஆசாரியார்கள் பலர் இங்கு தோன்றியும், வாழ்ந்தும், அரங்கனைப் போற்றி மகிழ்ந்த தலம். இந்த திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீஅரங்கநாத சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகத்திற்காக, கடந்து ஜூன் மாதம் தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.10.45 கோடி நிதி ஒதுக்கியிருந்தார். இதனையடுத்து கடந்த ஜூன் 5ம் தேதி திருப்பணிகள் துவங்கின. கொள்ளிடத்திலிருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று காலையில் துவங்கிய கும்பாபிஷேகத்தில், 43 உப சன்னிதிகள் மற்றும் 11 கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி, நரசிம்ம பட்டர் தலைமையிலான பட்டாச்சாரியார்கள், கும்பாபிஷேகத்தை நடத்தினர்.