இழந்த பதவியை மீட்டுக்கொடுக்கும் ஸ்ரீவானசுந்தரேஸ்வரர்.

templeராஜராஜசோழனின் மைந்தன் ராஜேந்திர சோழன், கங்கையையும் கடாரத்தையும் வென்று, கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என எல்லோராலும் பெருமிதத்துடன் அழைக்கப்பட்டான். வடக்கில் இருந்து சைவர்களை அழைத்து வந்து, தொண்டை மண்டலம் என்று சொல்லப்படும் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அவர்களை அங்கே குடியமர்த்தினான். அந்த ஊருக்குத் தன் தாயாரின் நினைவாக, வானவன்மாதேவிபுரம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தான்.

அத்துடன், அங்கே அழகிய சிவாலயம் ஒன்றைக் கட்டினான். அந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீவானசுந்தரேஸ்வரர். தற்போது மானாம்பதி என அழைக்கப்படும் இந்தக் கிராமத்தில் உள்ள சிவாலயத்தில் இன்றைக்கும் இருக்கிறது ராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டு.

மேலும், வேதம் கற்ற அந்தணர்களை அழைத்து வந்து, அவர்களுக்கு அங்கே வீடுகள் கட்டிக் கொடுத்து, வேத பாடசாலையும் அமைத்துக் கொடுத்தான் ராஜேந்திர சோழன் என்கிறது அந்தக் கல்வெட்டுக் குறிப்பு. இதனால், அந்த ஊர் வானவன்மாதேவி சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டதாம்.

காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது உத்திரமேரூர். அங்கிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில்  உள்ளது மானாம்பதி கிராமம். காஞ்சிபுரத்திலிருந்து மேல்ரோடு வழியே உத்திரமேரூர் செல்லும் பேருந்துகளும், சென்னையிலிருந்து உத்திரமேரூர் வழியாக வந்தவாசி செல்லும் பேருந்துகளும் இந்த ஊர் வழியாகவே செல்கின்றன.

இங்கே, ஸ்ரீபெரியநாயகி சமேதராக அருள்பாலிக்கிறார் ஸ்ரீவானசுந்தரேஸ்வரர். மகா கணபதி, ஆறுமுக சுவாமி, தட்சிணாமூர்த்தி, சண்டீஸ்வரர், பிரம்மா, துர்கை, பைரவர், நாயன்மார்கள் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

தைப்பூசம், மாசிமகம் முதலானவை இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. இழந்த பதவியையும் செல்வத்தையும் பெற வேண்டி, இந்திரன் பூஜித்து வணங்கிய தலம் இது என்கிறது ஸ்தல புராணம். சூரபத்மனால் சிறை வைக்கப்பட்ட இந்திரன், இங்கு வந்து தீர்த்தக் குளத்தில் நீராடி, சிவனாரை வேண்டி, இழந்ததையெல்லாம் மீட்டான்.

மானாம்பதி ஸ்ரீவானசுந்ரேஸ்வரரை கண்ணார தரிசித்து, மனதார வேண்டுங்கள். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள்!

Leave a Reply