ஆண்டாள் கோவில்
வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்தன. கோவிலின் திருப்பாவை விமானத்தில் தங்கத்தகடுகள் பதிக்கப்பட்டு அது புதிய பொலிவுடன் காட்சி அளித்தது. திருப்பணிகள் முடிவடைந்ததையொட்டி, கடந்த 16-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.
இதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ், செய்தி மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகம்
ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று ஆகமமுறைப்படி நடந்தது. வேத மந்திரங்கள் ஓத ஆண்டாள் கோவில் தங்கவிமானம், ராஜகோபுரம், கருடாழ்வார் கோபுரம் ஆகியவற்றுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு காலை 10¼ மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என பக்தி கோஷம் எழுப்பினர். ஆண்டாள் கம்ச வாகனத்திலும், ரெங்கமன்னார் கருட வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து அருள்பாலித்தனர்.
கும்பாபிஷேக விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலிதாவின் தோழி சசிகலா, ராம்கோ குரூப் சேர்மன் ராமசுப்பிரமணிய ராஜா, கோவில் தக்கார் ரவிச்சந்திரன், கலெக்டர் ராஜாராமன், திருமலை திருப்பதி சின்னஜீயர், வானமாமலை ஜீயர், மணவாள மாமுனிகள் ஜீயர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்கள் குவிந்தனர்
புதிதாக அமைக்கப்பட்ட தங்க விமானத்தை காண பக்தர் களுக்கு மதியம் 1 மணியில் இருந்து அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்கள் மாலை 6 மணி வரை தங்கவிமானத்தை பார்த்து வியந்ததுடன் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் வந்து குவிந்தனர். கும்பாபிஷேகத்தை பக்தர்கள் நேரடியாக கண்டுகளிக்கும் வண்ணம் நகரின் பல இடங்களில் அதிநவீன மின்னணு திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
பக்தர்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தெற்கு ரதவீதி ஜெயராம் செட்டில் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் அன்னதானம் வழங்கினார். செருக்கூர் மண்டபம், கோவில் அன்னதான மண்டபம், வடபத்ர சயனர் கோவில் மண்டபம் ஆகிய இடங்களில் உபயதாரர்கள் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் அன்னதான குழு சார்பில் ராஜரத்தினம் சுவாமிகள் அன்னதானம் வழங்கினார். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.