திருவில்லிப்புத்தூர் திருக்கோயில்

தமிழக அரசின் சின்னத்தில் இடம்பெற்றுள்ள, தமிழ்நாட்டின் அடையாளமாக காட்டப்பட்டுள்ள திருவில்லிப்புத்தூர் திருக்கோயில், ஆன்மீன பாரம்பரியத்திலும், கலை, சிற்ப படைப்பிலும் தனித்த முத்திரைப் பெற்ற உன்னத திருத்தலமாகும். வைணவ ஆன்மீக பாரம்பரியத்தை வளர்த்த பெரியாழ்வாரும், அவரால் கண்டெடுத்து வளர்க்கப்பட்ட ஸ்ரீ ஆண்டாள் தெய்வத்துள் உரைந்த தெய்வீகத் தலமிது.

இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளின் பெயர் வடபத்ரசாயி. இக்கோயிலின் வெளிப்பிரகாரத்திலுள்ள அழகிய நந்தவனத்தில் இருந்துதான் குழந்தை ஆண்டாளை பெரியாழ்வார் கண்டெடுக்கிறார். ஆடி மாதம் 8ஆம் நாள் ஆண்டாள் கண்டெடுக்கப்பட்ட நாளில்தான் இத்திருக்கோயிலில் சிறப்பு பூசையும், ஆடிப் பூர விழாவும் (12 நாட்களுக்கு) நடத்தப்படுகிறது.

இறைத்தலத்தில் பிறந்து, இறையருள் மிக்க பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டு, இறைப்பணி செய்து, இறைவனோடு ஒன்றான ஸ்ரீ ஆண்டாள், ஒவ்வொரு நாளும் இறைவைன நினைத்து பாடிய பாசுரங்கள் புகழ் பெற்றவை. அவற்றில் பல, இத்திருக்கோயிலின் சுற்றுச் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது.

இக்கோயில் ஆன்மீன பெருமை கொண்டது மட்டுமல்ல, சிற்பக் கலைக்கும் புகழ் பெற்றதாகும். கோயிலின் ஒவ்வொரு தூணிலும் உள்ள சிற்பங்களின் பின்னணியையும், புராண வரலாற்றையும் அறிந்துகொண்டு ரசித்திடல் வேண்டும்.

திருவில்லிப்புத்தூர் கோயிலின் தோற்றம் முற்கால சோழர் காலத்தைச் சேர்ந்தது என்றாலும், இக்கோயில் இன்று நாம் காணும் பிரமாண்ட வடிவத்தைப் பெற்றது பாண்டியர் பேரரசு இருந்த காலத்தில்தான் என்று வரலாறு கூறுகின்றது. 765 முதல் 815 இடைப்பட்ட ஆண்டுகளில் இந்த மிகப் பெரிய இராஜ கோபுரம் கட்டப்பட்டுள்ளது. பிற்காலத்தில் நாயக்கர் வம்சத்து அரசர்களாலும் இக்கோவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

இக்கோயிலுக்கு செல்ல விரும்புவோர் வழிபட மட்டுமே சென்றாலும் கூட, வழிகாட்டி ஒருவரின் துணையுடன் சென்று வழிபடுவது, கோயிலின் ஆன்மீன வரலாற்றை அறிந்துகொள்ள உதவும்.

மதுரையில் இருந்து 74 கி.மீ. தொலைவில், விருதுநகர் மாவட்டத்தில், செங்கோட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ளது. 192 அடி உயர இராஜ கோபுரம் வண்ண சிற்பங்களால் நெஞ்சைக் கவர்வதாக இருக்கும். இக்கோயில் மூப்பு 12 நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாயினும், இராஜ கோபுரம் 17வது நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

Leave a Reply