எந்த நடிகை உயரமானவர் என்ற கேள்வியை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஒரு தேர்வில் கேட்கப்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் தேர்வு ஒன்று அண்மையில் நடந்தது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியை பார்த்ததும் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேள்வித்தாளில் 92 வது கேள்வியாக பாலிவுட் நடிகைகளில் யார் உயரமானவர்கள்? என்ற கேள்வி இருந்ததுதான் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சியுற காரணம். இந்த கேள்விக்கு பதில் எழுத பாலிவுட் நடிகைகள் பிரீத்தி ஜிந்தா, தீபிகா படுகோனே, கத்ரினா கைஃப், ஹுமா குரேஷி ஆகிய 4 பேரது பெயர்களை கொடுத்து இருந்தனர்.மேலும் காதலர் தினம் எந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது? என்ற மற்றொரு கேள்வியும் அந்த கேள்வித்தாளில் இடம்பெற்றிருந்தது. இந்த இரண்டு கேள்விகளால் தேர்வு எழுதுபவர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது., டெல்லியில் உள்ள மகளிர் ஆணையம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் இதுபோன்ற மட்டத்திலான கேள்விகள் கேட்பது அபத்தமானது என்று கூறியுள்ள மகளிர் ஆணையம், மேற்கூறிய 2 சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கும் மதிப்பெண்கள் வழங்கக்கூடாது என பணியாளர் தேர்வாணையத்தை வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில் மேற்கூறிய சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம்பெற்றதற்காக ஸ்டாப் செலக்ஷன் கமிஷனின் தலைவர் பட்டாச்சார்யா வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த கேள்விகள் ஏற்கத்தக்கதல்ல என்பது மட்டுமல்ல, முறையற்றதும், தரக்குறைவானதும் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மகளிர் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று இந்த 2 கேள்விகளும் மதிப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படாது என்றும் பட்டாச்சார்யா உறுதி அளித்துள்ளார்.