திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியே!! தமாகா உள்ளே?
கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் போட்டியிட்ட திருமாவளவன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில் அவருடைய விடுதலை சிறுத்தைகள் கட்சி அணிமாற வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் மக்கள் நலக்கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸும் வரும் உள்ளாட்சி தொகுதியில் திமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் மதுரையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் மற்றும் ஜி.கே.வாசன் ஆகிய இருவரும் சந்தித்து பேசியதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி, தமிழக அரசியல் நிலவரம் பற்றி விவாதித்ததாகவும் தகவல்கள் வெளியாயின. இதைப் பற்றி இருதலைவர்களும் எவ்வித கருத்தும் கூறாமல் மவுனம் காக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.கே.வாசனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோது, “இந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமானது, இருவரும் தமிழக அரசியல் நிலவரம் பற்றி விவாதித்தோம்’ என்று மட்டும் கூறினார். ஏற்கனவே காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் திமுக, வரும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸை கழட்டிவிட்டு, தமாகாவை இணைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.