ஸ்டாலினுக்கு விரைவில் புதிய பதவி. பிறந்த நாள் விழாவில் கருணாநிதி சூசக தகவல்

birthdayதிமுக தலைவர் கருணாநிதி நேற்று தனது பிறந்த நாளை வெகுசிறப்பாக கொண்டாடினார். நேற்று காலை முதல் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் அவருக்கு நீண்ட வரிசையில் நின்று தங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் நேற்றிரவு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி விரைவில் ஸ்டாலினுக்கு புதிய பதவி கொடுக்கவிருப்பதாக மறைமுகமாக பேசினார். இவருடைய இந்த பேச்சினால் ஸ்டாலின் ஆதரவாளர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் அவர் இந்த கூட்டத்தில் பேசியதாவது: ”நான் அதிக நேரம் உரையாற்றி உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை. கடல் போன்ற மக்கள் திரளில் ஒரு சில வார்த்தைகள் சொல்லாவிட்டால், கருணாநிதிக்கு அவரே வெளியிட்ட கருத்துகளுக்கு ஒப்புதல் இல்லை போலும் என்று விகாரமாக சிண்டு முடியும் பாணியில் பேசவும், எழுதவும் தொடங்குவார்கள்.

ஆகவே தான், இந்த விழாவில் பங்குபெற்றதிலும், பங்குபெற்றுள்ள அருமைத் தம்பிமார்களை பாராட்டுவிதத்தில் ஒருமித்த கருத்தோடு மகிழ்ச்சியை வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

இன்றைக்கு இந்த கூட்டம் தொடங்குகிற நேரத்தில் நான் புதிதாக எழுதுகின்ற படத்தினுடைய விவரங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அது, ஒரு படத்துக்கு கதை, வசனம் எழுதுவது காசு சம்பாதிப்பதற்காக அல்ல.

நான் இன்று ,நேற்றல்ல;பல்லாண்டுகளாக எழுதுகின்ற படங்கள் எல்லாமே எழுச்சி ஊட்டுவதாக, தாய்த் தமிழகத்துக்கு வீரம் அளிப்பதாக எழுதப்பட்ட படங்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். பூம்புகார், பராசக்தி போன்ற படங்களைத் தந்திருக்கிறென். நான் படங்களிலேயே அண்ணாவின் தத்துவங்களை பெரியாரின் கொள்கைகளை கூறி இருக்குறேன்.

திமுகவில் .. என்னைப் பின்பற்றி,. மன்னிக்க வேண்டும். அறிஞர் அண்ணாவைப் பின்பற்றி இதுபோன்ற துறைகளிலே ஈடுபட்ட காரணத்தால் தான் வளமான, வலிமையான இயக்கத்தை காண முடிந்தது. அந்த இயக்கத்தின் வளர்ச்சி நன்மையிலும் முடிந்தது. சில நேரங்களில் தீமையாகவும் முடிந்தது. அந்த தீமை என்னவென்று விளக்கி, ஒரு நல்ல விழாவில் மாசு ஏற்படுத்த விரும்பவில்லை.

அந்த மாசு பளு எல்லாம் தூசு போல நம்மால் பாவிக்கப்படும். நம்மால் விரட்டி அடிக்கப்படும் என்ற நம்பிக்கையோடுதான் இன்றைய தினம் கலைத்துறைப் பணிகளையும் லட்சியப் பணிகளையும் ஒன்றாகக் கருதி ஆற்றிக்கொண்டிருக்கிறன். அந்தப் பணிக்கு ஆதரவாக இருக்கும் அனைவரையும் வரவெற்கிறேன். வாழ்த்துகிறேன்.

ஸ்டாலின் சித்திரமாக சிலையாக எப்படி தொண்டாற்றுவார் என்று என் மனக் கண் முன்னால் எண்ணிப்பார்க்கிறேன்.

எனக்கு 90வயது. சொல்லிக்கொள்ள வெட்கப்படவில்லை. 90 வயதுக்குள் நான் கண்ட, நாங்கள் கண்ட என்று சொல்வதற்குக் காரணம், திமுகவின் உறுப்பினராக இருந்து தஞ்சை மாவட்ட பகுதி செயலாளராக இருந்து, திமுகவின் தலைவனாகவே ஆகியிருக்கிறேன் என்றால் எத்தனை கட்ட வளர்ச்சி எனக்கு?

அந்த வளர்ச்சி போல, ஸ்டாலின் ஆனாலும், துரைமுருகன் ஆனாலும் அவர்கள் எல்லாம் நாங்கள் பெற்ற இன்பம் நீங்களும் பெறவேண்டும் என்ற வாழ்த்துக்குரியவர்கள். அவர்களைப் பாராட்டுகிறேன்.

திருக்குவளை கிராமத்தில் மாடு ஓட்டிக்கொண்டு கல்லூரி படிக்க வழியில்லாமல் அலைந்து திரிந்து அவதிப்பட்டு எப்படியோ படித்து முடித்து பெரியாரை தலைவரகாக் கொண்டு, அண்ணாவை தலை சிறந்த வழிகாட்டியாகக் கொண்டு கருணாநிதி முன்னேறியதைப் போல நாமும் முன்னேற வேண்டாமா என்று நினைத்தால் போதும். ஒவ்வொரு இளைஞனும் கருணாநிதி ஆகலாம். ஒவ்வொரு இளைஞனும் ஸ்டாலின் ஆகலாம். ஒவ்வொரு இளைஞனும் துரை முருகன் ஆகலாம். ஒவ்வொரு இளைஞனும் திமுகவின் ஆற்றல் பெற்றவனாக ஆகலாம்.

பொதுவாழ்க்கையிலே, அரசியல் வாழ்க்கையிலே, சமுதாய வாழ்க்கையிலே துறக்க வேண்டியது பெரிதான விஷயம் அல்ல. இளைஞர்கள் தங்கள் சுயநலத்தை துறக்க வேண்டும். அப்படி செயல்பட்டால் சமூகத்தை காப்பாற்றுகிற, சாதி ஒழிந்த, மத பேதமில்லாத சமுதாயத்தை உருவாக்கலாம். அந்தப் பணியை ஏற்படுத்துவது பெரிய காரியமல்ல. மிக சுலபமான காரியம்தான்.

மத்திய அரசு இமயமலையில் இருந்து கன்னியாகுமரி வரை நாங்களே ஆளப்பிறந்தவர்கள். நீங்கள் அணில் தான் என்று நினைத்தால் மீண்டும் விடுதலை கோஷத்தை ஆரம்பிப்போம்.

திமுக ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று நினைத்து யாரேனும் பிரிவினை செய்ய நினைத்தால், அதை வைத்து அரசியல் நடத்த முன்வந்தால், வட நாட்டில் கூட அவர்களால் தலையெடுத்து அந்த காரியத்தை வெற்றிகரமாக செய்ய முடியாது.

திமுக சமுதாய சீர்திருத்த இயக்கம். பெரியாரால், அண்ணாவால், அவர்களைத் தொடர்ந்து இந்த இயக்கம் வலுப்பெற்றது. மனிதனாக நடப்போம். மனிதனாக நடத்த யார் மறுத்தாலும் வீழ்த்துவோம்.

இளைஞர்களே, உங்கள் கையிலே இந்த நாடு இருக்கிறது. அதனால்தான், மாணவர் போராட்டம் இந்தி எதிர்த்து குரல் கொடுத்தது. அப்படிப்பட்ட இளைஞர்கள் இருக்கும்வரையில், எந்த மொழியும் நம்மை இழிவுபடுத்திடமுடியாது. அந்த வீரத்தோடு நடைபோடவேண்டும். அதுதான் வெற்றிக்கு வித்து. வழிகாட்டி. வெற்றிப் பாதையில் வீரநடை போடுவோம். யார் குறுக்கிட்டாலும் சரியான பதிலடி கொடுப்போம்” என்று கருணாநிதி பேசினார்

Leave a Reply