அதிமுக ஆட்சியில்தான் ஸ்டாலின் மதுரைக்கு தைரியமாக வருகிறார். செல்லூர் ராஜூ
சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து ‘ஜனநாயகம் படும் பாடு’ என்ற தலைப்பில் திமுகவினர் பல இடங்களில் கூட்டங்கள் நடத்தி கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவினர்களும் போட்டி கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மதுரையில் நடந்த அதிமுக கூட்டம் ஒன்றில் அமைச்சர் செல்லூர் ராஜு காட்டமாக பேசினார். அவர் பேசியதாவது: தி.மு.க. ஆட்சியில், ஸ்டாலினால் மதுரைக்கு தைரியமாக வந்து செல்ல முடிந்ததா… அம்மா ஆட்சியினால்தான் வர முடிகிறது. இது தெரிந்தும் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசலாமா… சட்டசபையில் எப்போதும் அம்மா, அம்மா என்று அமைச்சர்கள் சொல்வதாக தி.மு.க.வினர் பேசுகிறார்கள். எங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்த அம்மா பெயரை சொல்லாமல் வேறு யார் பெயரை நாங்கள் சொல்வது. அப்படித்தான் சொல்லுவோம்”
இதே கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியபோது: “பல தலைவர்கள் அமர்ந்த சபாநாயகர் ஆசனத்திற்கு ஒரு வரலாறு உண்டு. இங்கிலாந்தில் செய்யப்பட்டது அது. அவ்வளவு உயர்ந்த ஆசனத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த தனபாலுக்கு அம்மா வழங்கி கவுரவித்திருக்கிறார். அதை பொறுக்க முடியாத தி.மு.க.வினர், சபாநாயகரை இழிவாக பேசுகின்றனர். அவர் அழகாக இல்லை என்கின்றனர். அவர் அழகில்லை என்று கவலைப்பட வேண்டியது அவர் மனைவி, இவர்களுக்கு ஏன் அந்த கவலை. சட்டசபை மாண்பு பற்றி ஸ்டாலினுக்குத்தான் தெரியவில்லை. பலமுறை எம்.எல்.ஏ.வாக இருந்த துரைமுருகனுக்குமா அது தெரியாது.