ஸ்டாலினை கடுப்பேற்றிய கார்த்திக். சந்திப்பு ரத்து செய்ததன் பின்னணி என்ன?
திரையுலகில் நல்ல ஹீரோவாக இருந்த நடிகர் கார்த்திக் தேர்தல் நேரத்தில் மட்டும் காமெடி அரசியல்வாதியாக மாறி கட்சித் தலைவர்களிடம் கூட்டணி குறித்து பேசுவதும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து அரிவிப்பதும் அவருக்கு வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த தேர்தலில் திடீரென காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்தித்து ஆதரவு தருவதாக கூறிவிட்டு பின்னர் திடீரென பின்வாங்கியதும் அனைவரும் அறிந்த கதைதான்
அதேபோல் இந்த தேர்தலிலும் கார்த்திக் தனது காமெடியை தொடங்கிவிட்டார். நேற்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்து மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கார்த்திக் திட்டமிட்டிருந்தாராம். இதனால் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் காலை முதல் காத்திருந்தார். ஆனால் பலமணி நேரம் அவர் காத்திருந்தும் கார்த்திக் வருவதாக அறிகுறியும் தெரியவில்லை. அவரிடம் இருந்து எந்த தகவல்களும் இல்லை. எனவே கடுப்பான மு.க.ஸ்டாலின் இந்த சந்திப்பை ரத்து செய்துவிட்டு கோபமாக சென்றுவிட்டார்.
மு.க.ஸ்டாலினுடன் கார்த்திக் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதை அறிந்த ஆளும் தரப்பு டென்ஷனாகி ஒருசில நடவடிக்கைகளை எடுத்ததாகவும், அதன் காரணமாகவே கார்த்திக் பின்வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவருடன் நடித்த விஜயகாந்த் தனிக்கட்சி தொடங்கி இன்று மூன்றாவது பெரிய கட்சியின் தலைவராக இருந்து வரும் நிலையில் கார்த்திக் இன்னமும் காமெடி தலைவராகவே இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.