நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்த மர்மம் இன்னும் விலகாத நிலையில், அவருடைய மரணத்திற்கு ரஷ்யாவின் சர்வாதிகாரி ஸ்டாலின் தான் காரணம் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற மெர்சண்ட் சேம்பர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சுப்பிரமணியன் சுவாமி ”1945 ஆம் ஆண்டில் இறந்து விட்டதாக கருதப்படும் நேதஜி சுபாஷ் சந்திர போஸ், விமான விபத்தில் பலியானதாக கூறப்படுவது உண்மையான தகவல் அல்ல. உண்மையில் அவர் சீனாவின் மன்சூரியா பகுதிக்கு தப்பிச் சென்று அங்கிருந்தபடியே சுதந்திர இந்தியாவுக்கு செயல்திட்டம் வகுத்தார்.
அந்த சமயத்தில் அந்த பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. சுபாஷ் சந்திர போஸ் அங்கு இருப்பதை அறிந்துகொண்ட ரஷ்யாவின் சர்வாதிகாரி ஸ்டாலின் அவரை சைபீரியாவிலுள்ள சிறையில் அடைத்து வைத்து 1953 ஆம் ஆண்டு வாக்கில் தூக்கிலிட்டோ அல்லது துன்புறுத்தியோ கொன்றிருக்கிறார்.
இது, அப்போதைய இந்திய பிரதமர் ஜவர்ஹலால் நேருவுக்கு நன்றாக தெரியும். ஆனால் அவர் இந்த விஷயத்தை இந்திய மக்களிடம் மறைத்துவிட்டார். இது தொடர்பான உண்மைகள் எதிர்காலத்தில் வெளியாகும்” என்றார்.