இறந்தவர்களை உயிருடன் வரவழைத்த மு.க.ஸ்டாலின். பெரும் பரபரப்பு
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டவர்களை மேடையேற்றி, தமிழகத்தில் ஆளும் கட்சியும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து திமுக ஓட்டுக்களை திட்டமிட்டு அழித்து வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
கடலூரில் திமுக சார்பில் நீதி கேட்கும் பேரணி நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “தற்போது வாக்காளர்கள் பட்டியலில் உள்ள தி.மு.க.வினர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. நான் ஆதாரத்துடன் அதை நிரூபிக்கிறேன். தி.மு.க. உறுப்பினர் உதயகுமார் என்பவர், கடந்த தேர்தலில் வாக்களித்து இருக்கிறார். அவரது குடும்ப அட்டையின் மூலம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ரேசனில் பொருட்கள் வாங்கியதற்கான கையெழுத்து உள்ளது. ஆனால், தற்போதைய வாக்காளர் பட்டியல் படிவம் எண் 7ல் உதயகுமார் இறந்து விட்டார் எனக்கூறி அந்த பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்கியிருக்கிறார்கள்.
உங்களுக்கு இன்னும் ஆதாரத்தை நிரூபிக்கட்டுமா? இறந்து போன அந்த உதயகுமார் தற்போது உயிரோடு இங்கே வருகிறார் பாருங்கள்” என்றதுடன், உதயகுமாரையும் மேடைக்கு அழைத்து அறிமுகம் செய்து வைத்தார் மு.க.ஸ்டாலின்.
மேலும்”இவர் மட்டுமின்றி உதயதெய்வம் மற்றும் கவியரசு என்ற தி.மு.க. தொண்டர்களின் பெயரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறார்கள்” எனக்கூறிய மு.க.ஸ்டாலின், அவர்களையும் மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்நிலையில் ஸ்டாலினின் புகாருக்கு தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா விளக்கம் கூறியுள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “மு.க.ஸ்டாலின் கூறுவது போல் தி.மு.க. உறுப்பினர்கள் நீக்கப்படுவதாக இதுவரை எந்தவித புகார்களும் தேர்தல் ஆணையத்திற்கு வரவில்லை. இவ்வாறு புகார் வந்தால், அது தொடர்பான தவறு செய்த தேர்தல் அதிகாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.