ஆட்சியை ஆளுனர் கவிழ்க்கவில்லை என்றால் நாங்கள் கவிழ்ப்போம்: மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி மெஜாரிட்டியை இழந்துவிட்டதாகவும், எனவே ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் திமுக உள்பட எதிர்க்கட்சிகள் ஆளுனரை வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் தஞ்சையில் நடந்த திருமண விழா ஒன்றில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆட்சியை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சி கவிழும் வரை சட்ட ரீதியாகவும், மக்கள் மன்றத்திலும் போராட்டம் தொடரும்’ என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது செயல்படாத, மைனாரிட்டி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தை காப்பற்றுமாறு எனக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வருகின்றன. தமிழக அரசியல் விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர், ஆளுநரிடம் நேரில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதி ஆளுநரை நேரில் சந்தித்து சட்டமன்றத்தை கூட்ட உத்தரவிடுமாறு வலியுறுத்த உள்ளோம்.
குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆட்சியை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சி கவிழும் வரை சட்ட ரீதியாகவும், மக்கள் மன்றத்திலும் போராட்டம் தொடரும். இன்று நாடு குட்டிச்சுவராகியுள்ளது. சட்டம் ஒழுங்கு மோசமாகியுள்ளது. நீட் உள்ளிட்ட விவகாரங்களில் மோடி தலைமையிலான அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் உள்ளது. திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தற்போதைய அரசை கவிழ்க்க முயற்சிக்கவில்லை, தமிழக மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே திமுக ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.