பட்டியல், பில்லா, ஆரம்பம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது படத்திற்கு கதை மட்டுமே முக்கியம் என்றும், அஜீத், ஆர்யா முக்கியமில்லை என்றும் கூறியிருப்பதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் விஷ்ணுவர்தன் கூறும்போது ஒரு கதைக்கு எந்த நாயகன் பொருந்துவார் என்பதை நான் முழுவதுமாக திரைக்கதை அமைத்த பிறகுதான் முடிவு செய்வதாகவும், முதன்முதலில் பட்டியல் படத்தை இயக்கியபோது தனது நண்பர்கள் இந்த படத்தில் ஆர்யாவை பயன்படுத்த வேண்டாம் என்றும், அர்ஜூன் போன்ற நல்ல நடிகரை பயன்படுத்துமாறும் அறிவுரை கூறினர். ஆனால் இந்த கதைக்கு ஆர்யாதான் பொருதுவார் என என் மனதிற்கு தோன்றியதால் அவர்களின் அறிவுரையை மீறி தான் ஆர்யாவை நடிக்க வைத்ததாக கூறினார்.
அதேபோல் பில்லா படத்தை ரீமேக் செய்யும்போது ரஜினி அளவுக்கு அஜீத்தால் ஈடுகொடுத்து நடிக்க முடியாது என்று தனது நண்பர்கள் கூறியதை தான் ஏற்கவில்லை என்றும் விஷ்ணுவர்தன் கூறினார். இருப்பினும் எனது திரைக்கதைக்கு அஜீத் மற்றும் ஆர்யாதான் தேவை என்றில்லை. அந்த கேரக்டர்களுக்கு பொருத்தமாக யார் இருக்கின்றார்களோ அவர்களை வைத்து படம் இயக்குவேன் என்று கூறியுள்ளார்.