சித்த மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

3

சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (ஜூன் 29) தொடங்கியது.  வரும் ஜூலை 24-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

 சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா-இயற்கை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்திய மருத்துவ முறை படிப்புகள், தமிழகத்தில் 6 அரசு கல்லூரிகளிலும், 21 தனியார் கல்லூரிகளிலும் உள்ளன. இளநிலை பட்டப் படிப்புகளான பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பிஎன்ஒய்எஸ், பிஎஸ்எம்எஸ், பியூஎம்எஸ் ஆகியவற்றுக்கு அரசு இடங்கள் 336, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 780 என மொத்தம் 1116 இடங்கள் உள்ளன.

 6 அரசுக் கல்லூரிகள்:  சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி, அரசு யுனானி மருத்துவக் கல்லூரி, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி, திருமங்கலம் அரசு ஹோமியோபதி கல்லூரி, நாகர்கோவில் அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி ஆகிய ஆறு கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

 கட்டணம்:  விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டவர்கள், விளையாட்டு வீரர்கள், பதிவு பெற்ற இந்திய முறை பரம்பரை மருத்துவர்களின் குழந்தைகள், பிளஸ் டூ பாடத்திட்டத்தில் சித்த மருத்துவப் பாடத்தை தேர்வு செய்து படித்தவர்கள் ஆகியோர் ரூ. 100 செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு கட்டணம் கிடையாது.

 கடைசி தேதி:  ஜூலை 24-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் அந்தந்தக் கல்லூரிகளில் ஒப்படைக்க வேண்டும். இது குறித்த மேலும் விவரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Leave a Reply