2018ல் பறக்க தொடங்கி 2017ல் தரை இறங்கிய விமானம்
கண்டங்களுக்கு இடையேயான நேர வேறுபாட்டால் 2018 புத்தாண்டு தினத்தில் பறக்க தொடங்கிய ஹவாயியன் விமானம், 2017-ல் தரை இறங்கியுள்ளது.
உலகிலேயே நியூசிலாந்து நாட்டில்தான் புத்தாண்டு முதலில் பிறக்கிறது. அந்த வகையில் நியூசிலாந்தில் 2018-ம் ஆண்டு பிறந்தவுடன், அங்குள்ள ஆக்லாந்து நகரில் இருந்து ஹவாயியன் ஏர்லைன் 446 என்ற விமானம் பறக்கத் தொடங்கியது. அங்கிருந்து அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள ஹோனோலு நகரை 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி 10.15 மணிக்குத் தரையிறங்கியது.
முன்னதாக டிசம்பர் 31-ம் தேதி 11.55 மணிக்கு விமானம் ஆக்லாந்தில் இருந்து கிளம்புவதாக இருந்தது. ஆனால் 10 நிமிட தாமதம் காரணமாக புத்தாண்டு நள்ளிரவு 12.05 மணிக்குக் கிளம்பியுள்ளது. அங்கிருந்து 9 மணி நேரம் பயணம் செய்து டிசம்பர் 31-ம் தேதி இரவு 10.15 மணிக்கு விமானம் தரையிறங்கியது.
நியூசிலாந்துக்கும், ஹவாய் தீவுக்கும் இடையே சுமார் 23 மணி நேர இடைவெளி இருந்ததால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதைப் பற்றிக் குறிப்பிட்ட பத்திரிகையாளர் ஒருவர், ”காலங்களுக்கு இடையேயான பயணம் இது!” என்று குறிப்பிட்டுள்ளார்.