பூமியிலிருந்து 3 ஆயிரத்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவிற்கு அனுப்பப்படும் ஸ்டீபன் ஹாக்கிங் குரல்
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் சமீபத்தில் மரணம் அடைந்தார் என்பது தெரிந்ததே. குவாண்டம் கோட்பாடு, அண்டவியல், கருந்துளை ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்த இவரது சேவை உலகிற்கு பெரும் பலனை தந்தது மட்டுமின்றி சாதாரண மக்களுக்கும் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் என்ற பெருமையும் கிடைத்தது.
நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும், விஷேசமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தனது ஆராய்ச்சியை தொடர்ந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், கடந்த மார்ச் 14-ம் தேதி அதிகாலை தனது 76-வது வயதில் காலமானார். அவரது உடல் பிரபல அறிவியலாளர் ஐசக் நியூட்டனின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரின் குரல் அடங்கிய பாடல் விண்வெளியில் செலுத்தப்பட உள்ளது. பிளாக் ஹோல் குறித்து ஆராய்ச்சி செய்த ஹாக்கிங்கின் குரல் அங்கு ஒலிக்க வேண்டும் என அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
6 நிமிடங்கள் அடங்கிய இந்த பாடலின் இடையில் ஹாக்கிங்கின் குரல் உள்ளது. இது ஐரோப்பா விண்வெளி நிலையத்தில் இருந்து செபிரியாஸ் ஆண்டனா வழியாக பூமியிலிருந்து 3 ஆயிரத்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பிளாக் ஹோலிற்கு அனுப்பப்படுகிறது.