ஆமணக்கு, இலை, விதை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன்களை உள்ளடக்கியவை. இதன் விதையினின்று எண்ணெய் தயாரிப்பர். விதைகளை அதிக அழுத்தம் கொண்டு பிழிந்தும், விதைகளைப் பொடித்து நீரிலிட்டுக் காய்ச்சி மேலே மிதந்து வரும் எண்ணெயை சேமித்தும் ஆமணக்கு எண்ணெய் தயாரிப்பர்.
இரண்டாவதாகச் சொல்லப்பட்ட முறையில் தயாரித்த எண்ணெய் மருத்துவத்துக்கு உகந்ததாக அமையும். இதை விளக்கெண்ணெய் அல்லது முத்துக் கொட்டை எண்ணெய் என்றும் அழைப்பதுண்டு. இது சிற்றாமணக்கெண்ணெய், பேராமணக்கெண்ணெய் என இருவகைப்படும். இது விளக்கெரிக்க உபயோகப் படுவதுடன் மருந்தாகவும் பயன்படுகிறது.
சிற்றாமணக்கெண்ணெய் சிறியவர் முதல் முதியவர் வரை வயிற்றை சுத்தப்படுத்தக் கொடுக்க கூடியது. பேதி மருந்தாகப் பயன்படுகின்றது. இப்படி உள்ளுக்கு மருந்தாவதோடு மேற்பூச்சு மருந்தாகவும் பல்வேறு தோல் நோய்களைப் போக்க பயன்படுகின்றது. விளக்கெண்ணெய் சிறிது கசப்பும் வெகுட்டலும் உடையது.
எனினும் நீர்சுருக்கு, மருந்து வேக்காடு, மலச்சிக்கல், முகவாதம், பக்கவாதம், குன்மம், பாண்டு, கீல்வாயு, உதிரச் சிக்கல், ஆகியவற்றைக் குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது. விளக்கெண்ணெய் குழந்தைகளைத் தாயைப் போல பேணிக்காக்கும் தன்மையுடைது.
கர்ப்பினிப் பெண்கள் பிரசவ காலத்தின் போது பிரசவ வலியைத் தூண்டிப் பிரசவத்தைத் துரிதப்படுத்தவும், பிரசவித்த பிறகு பெண்களின் வயிற்றைச் சுத்தப்படுத்தவும் பாதுகாப்பான பேதி மருந்ததாக விளக்கெண்ணெய் பயன்படுகிறது. மேலும் சீழ் பிடிக்காமல் ஆறும் வகையில் ரணங்களின் மேலும், தீக்காயங்களின் மேலும் பயன்படுகின்றது.
அலங்காரப் பொருள்களில், தோல் பராமரிப்பு மருந்துகளிலும், உதட்டுச் சாயங்களான லிப்ஸ்டிக் களில் 81 சதவீத அளவுக்கும், ஆமணக்கெண்ணெய் பயன்படுத் தப்படுகின்றது. இதிலுள்ள ரிசினோலிக் ஆசிட் என்னும் வேதிப் பொருளின் மருத்துவ குணம் அறிந்து இது பயன்படுத்தப் படுகின்றது. விளக்கெண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் அதன் சக்கை தாவரங்களுக்கான சிறந்த உரமாக விளங்குகின்றது.
ஆமணக்கு எண்ணெய், இலைகள், வேர், விதை, காய்கள் அத்தனையும் மருந்தாகப் பயன் தருகின்றன. ஆமணக்கு எண்ணெயில் கொழுப்பு சத்து 42-55 சதவீதமும், பரதச் சத்து 20-25 சதவீதம் வரையிலும் லெக்டின் என்னும் வேதிப் பொருள் 0.1-0.7 சதவீதம் என்னும் அளவிலும், பைரிடின் ஆல்கலாய்ட், டிரைகிளிசரைட்ஸ் குறிப்பாக கொழுப்புத் தன்மை வாய்ந்த ரிசினோலிக் ஆசிட் 85-90 சதவீதம் வரையிலும் சிறிதளவு டோக்கோஃபெரால் என்னும் விட்டமின் ஈ அடங்கியுள்ளன.
ஆமணக்கின் மருத்துவப் பயன்கள்:-
ஆமணக்கெண்ணெய் பொதுவாக வயிற்றைச் சுத்தம் செய்வதற்காகவும், வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றுவதற்காகவும் பயன்படுத்தப்டுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் விளக்கெண்ணெயை பேதியுண்டாக்கும் மருந்துகளுக் கெல்லாம் அரசன் என்றும் வாயுத் தொல்லைகளை விலக்க வல்லவன் என்றும் வெகு சிறப்பாக கூறுவது உண்டு.
ஆமணக்கு கனி வேர்ப்பகுதி வாயுக் குற்றங்களைப் போக்கச் செய்யும் தைலங்களிலும் குடிநீரிலும் பயன்படுத்தப்படுகிறது. வேரைக் குடிநீர் செய்து, அதில் சிறிதளவு பூ நீறு சேர்த்துக் காலை, மாலை என இருவேளையாகக் கொடுக்க ஒரு வாரத்தில் பக்க சூலை குணமாகும்.
* ஆமணக்கு வேர்க்குடிநீர் மூட்டுவலிகள், சிறுநீர்ப்பை வலிகள், கீழ்முதுகுவலி, வயிற்றுக் கோளாறுகள், வீக்கங்கள் ஆகியவற்றைத் தணிக்க செய்யும் அற்புத மருந்தாகும். ஆமணக்கு இலையும் உள் மருந்தாகவும், வெளி மருந்தாகவும் பயன்படுகின்றது.
வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றுவதற்கும், சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் வலி மற்றும் அடைப்பு ஆகியவற்றை குணப்படுத்தவும், மூட்டு வலிகளை குணப்படுத்தவும், நாட்பட்ட, சீழ்பிடித்த ஆறாப் புண்களை ஆற்றவும் பயன்படுகின்றது. ஆமணக்கு இலைகள் மேல்பற்றாக போடுவதற்கும், குடிநீர் வைத்துக் கழுவதற்கும் பயன்படுகின்றது.
* ஆமணக்கு விதைகள் மலச்சிக்கலை உடைக்கவும் மூட்டு வலிகளை குணப்படுத்தவும், ஈரல் மற்றும் மண்ணீரல் நோய்களை குணப்படுத்தவும், மூலம் மற்றும் கீழ்முதுகு வலியைத் தணிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. * எண்ணெய் மலமிளக்கி ஆகவும், பேதியுண்டாக்கி ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.
ஆமணக்கு மருந்தாவது எப்படி?
ஆமணக்கு எண்ணெய்யை 5 முதல் 10மி.லி வரை குடிப்பதால் வயிறு கழியச் செய்து சுத்தமாகும்.
* ஆமணக்கு எண்ணெயை பிரசவ வலியைத் தூண்டி பிரசவத்தைத் துரிதப்படுத்த 120மி.லி வரை கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கலாம்.
* ஆமணக்கு எண்ணெயை மேற்பூச்சாக பூசிவிடுவதால் மூட்டுவலிகள், தசைபிடிப்பு மற்றும் தசை வலிகள், முதுகு வலிகள் அத்தனையும் அகன்று போகும்.
* ஆமணக்கு எண்ணெயை ஒரு துணியில் நனைத்து மூட்டு வீக்கம் வலி கண்ட இடத்தின் மேற் சுற்றி அதன்மேல் ஒரு பிளாஸ்டிக் காகிதத்தை சுற்றி அதற்கும் மேலாக சுடு தண்ணீர் நிரப்பிய பாட்டிலால் ஒற்றடமிட மூட்டுவலி, வீக்கம் ஆகியன குணமாகும்.
* மாதவிலக்கு காலத்தின் போது மாதர்கள் அடிவயிற்றுவலி, இடுப்பு வலி என்று அவதிப்படும் போது விளக்கெண்ணெயை அடிவயிற்றின் மேல் பூசி வைக்க வலி விரைவில் தணிந்து போகும்.
* நெறி கட்டிகள் ஏற்பட்டு வீக்கமும், வலியும் ஏற்பட்டால் விளக்கெண்ணெயை மேற்பூசி வைக்க ரத்த ஓட்டம் சீர்பட்டு வீக்கமும் வலியும் குறை யும்.
* படுக்க போகும் முன் கண்களைச் சுற்றிலும் சிறிது விளக்கெண்ணெய் விட்டு நன்றாக மசாஜ் செய்து கொண்டால் நன்றாக தூக்கம் வருவதோடு கண்களைச் சுற்றிய கருவளையங்கள் மாறிப் போகும். கண்களுக்கு குளிர்ச்சியும் பார்வைத் தெரிவும் உண்டாகும்.
* 10மி.லி சிற்றாமணக்கு எண்ணெயோடு 5மி.லி தேன் சேர்த்து நன்றாகக் கலந்து உள்ளுக்கு வெறும் வயிற்றில் கொடுக்க வயிற்றுப் போக்கு ஏற்பட்டு வயிறு சுத்தமாகும். இதனால் பசியின்மை, வயிற்று வலி இவை குணமாவதோடு சீதள மிகுதியால் ஏற்பட்ட கோழைக்கட்டு, இரைப்பு, இருமல் இவைகள் இல்லாமற் போகும்.
* ஆமணக்கு இலைகளை சிறு துண்டுகளாக நறுக்கி சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டுடன் வலியுண்டாகச் செய்கின்ற கீல்வாயுகளுக்கும், வீக்கங்களுக்கும் ஒத்தடம் தர வீக்கமும் வலியும் தணிந்து போகும்.
* ஆமணக்கு இலைச் சாறு ஒரு ஸ்பூன் அளவு உள்ளுக்கு குடிக்கச் செய்து ஆமணக்கு இலைத் தீநீர் செய்து ஒற்றடம் தருவதாலோ அல்லது இலையை வதக்கி மார்பகங்களின் மேல் கட்டி வருவதாலோ பிள்ளை பெற்ற பெண்மணிகளுக்கு பால் நன்றாக சுரக்கும்.
* சிற்றாமணக்கு இலையோடு சம அளவு கீழ்க்காய் நெல்லி சேர்த்து வெறும் வயிற்றில் நெல்லிக்காய் அளவு சில நாட்கள் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் மறைந்து போகும். இப்படிப் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ஆமணக்கு நமக்கு சாலை ஓரங்களில் மண்டிக் கிடக்கும் தாவரமாகும். எண்ணெயும் எளிதில் கடைகளில் கிடைக்க கூடியதாகும். இதன் அருமை தெரிந்து மனதில் பதிந்து பயன் பெற வேண்டும்.