தர்மபுரி அருகே சந்தபட்டி என்ற கிராமத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மகன் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரம் செய்துகொண்டிருந்தபோது அவரது வாகனம் மீது அடையாளம் தெரியாத சிலநபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு சந்தபட்டி கிராமத்தில் அன்புமணி தேர்தல் பிரசாரம் செய்துகொண்டிருந்தபோது போது அவர் பயணம் செய்த வேன் மீது அடையாளம் தெரியாத சில நபர்கள் கற்களை வீசி தாக்கினர். இதனால் அன்புமணி வாகனத்தின் கண்ணாடி நொறுங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அன்புமணிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பா.ம.க. கட்சியினர் உடனே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தருமபுரி மாவட்ட எஸ்.பி அஸ்ரா கர்க் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தார். குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என எஸ்.பி. அஸ்ரா உறுதிமொழி கொடுத்ததால் மறியலை பாமகவினர் கைவிட்டனர்.
இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த வைகோ, “இந்தக் கொலைவெறி வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் திட்டமிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டு கைது செய்து கூண்டில் நிறுத்த வேண்டும். ரணகளமும், கலவரமும் ஏற்படட்டும் என்று எண்ணி திட்டமிட்டு தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.