ஐ.பி.எல் போட்டியை அடுத்து பீர் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீரை நிறுத்த வேண்டும். சிவசேனா வலியுறுத்தல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரலாறு காணாத தண்ணீர்ப்பஞ்சம் நிலவி வருவதால் அம்மாநிலத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் இடம் மாறிவிட்டன என்பதை பார்த்தோம். ஐ.பி.எல் போட்டிக்கு மைதானத்தை சீரமைக்க தண்ணீர் தரமுடியாது என மகாராஷ்டிரா முதல்வர் கறாராக கூறியதை அடுத்து பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல் போட்டியை அடுத்து மதுபான தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் கொடுப்பதை அரசு நிறுத்த வேண்டும் என சிவசேனா கட்சி அரசை வலியுறுத்தியுள்ளது. இதனாப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா’வில் கூறியிருப்பதாவது, ‘மகாராஷ்டிராவில் பீர் உற்பத்தி செய்யும் 10 பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. வறட்சி நிலைமைகளால் இந்தத் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் நீரின் அளவில் 20% குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத்தொழிற்சாலையை நம்பி ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை எனவே இதனையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. ஆனால் அரசு ஒரு நடுநிலையான ஒரு தீர்வை உடனடியாக எட்ட வேண்டியது அவசியம்.
இந்தச் சூழ்நிலையில் தண்ணீர் மனித உயிரைக் காக்கவே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்த அரசு உணர வேண்டும்.
குடிநீருக்குப் பதிலாக பீர் அருந்துவது நமது பண்பாடல்ல. மேலும் வறண்ட பகுதிகளில் வாழும் மக்கள் தொகுதியினர் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை வாங்கும் அளவுக்கு பண ஆதாரம் கொண்டவர்களல்லர்.
சில பாஜக அமைச்சர்கள், பீர் உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு தடையின்றி நீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். ஆனால் மனித உயிரைக் காப்பாற்றுவதுதான் அரசின் கடமை என்று மக்கள் நினைக்கிறார்கள’ இவ்வாறு அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. ஐ.பி.எல் போட்டியை அடுத்து பீர் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் நிறுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.