புதிய சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்பட்டாலும் போராட்டம் தொடரும். வழக்கறிஞர்கள்
வழக்கறிஞர்களுக்கு எதிரான புதிய சட்டத்திருத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்த போதிலும் தங்களுடைய போராட்டம் தொடரும் என்று சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் வழக்கறிஞர்கள் சட்டத்தில் கொண்டு வந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டை முற்றுகையிட்டு தமிழக முழுவதிலும் இருந்து வந்திருந்த வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஐகோர்ட் பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்த நிலையில், புதிய சட்டத்திருத்ததை நிறுத்தி வைக்கக் கோரி வழக்கறிஞர் காசிராமலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமையிலான அமர்வு, “புதிய சட்ட திருத்த விதிகளின் மீது வழக்கறிஞர்களுக்கு ஒரு விதமான அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த புதிய விதிகளை மீண்டும் ஆய்வு செய்து, இறுதி முடிவு எடுக்கும் வரை, இந்த புதிய விதிகளின் அடிப்படையில் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று நாங்கள் ஏற்கனவே பல முறை அறிவித்துவிட்டோம். ஆனால் இதை வழக்கறிஞர்கள் புரிந்துகொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். உண்மையில் போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் நோக்கம் வேறு விதமாக உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் தலைவர்கள் இந்த போராட்டத்தை நடத்தவில்லை. மூன்றாம் நபர்கள் எல்லாம் தலைமை தாங்கி போராட்டத்தை நடத்துகின்றனர். இந்த புதிய சட்டவிதிகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட 5 நீதிபதிகள் கொண்ட குழுவும் இதே முடிவினை கடந்த 22ம் தேதி எடுத்துள்ளது. இந்த முடிவினை விளக்கமாக கடந்த 23ம் தேதி பத்திரிகைகளுக்கு அறிக்கையாகவும் கொடுக்கப்பட்டது. எனவே, புதிய சட்டத் திருத்த விதிகள் குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டது.
இதுகுறித்து ஆலோசனை செய்வதற்காக சென்னை ஐகோர்ட் வக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் சற்று முன்னர் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நீதிமன்றம் புறக்கணிப்பு மற்றும் போராட்டம் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், 126 வழக்கறிஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட 5 வழக்கறிஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.