ஈக்குவடார் நாட்டில் பயங்கர நிலநடுக்கம். 272 பேர் பலி. 2500 பேர் படுகாயம்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜப்பானில் அடுத்தடுத்து இரண்டு நில நடுக்கங்கள் ஏற்பட்டு அந்நாட்டு மக்களை பெருந்துயரத்தில் ஆழ்த்திய நிலையில் அதே நாளில் தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரிலும் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு 272 பேர் வரை பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை 7 மணிக்கு ஈக்குவடார் நாட்டின் மியூஸ்னி நகருக்கு 27 கி.மீ. தொலைவில் 19.2 கி.மீ. ஆழத்தில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 7.8 புள்ளிகளாக அமெரிக்க புவியியல் மையத்தில் பதிவாகியுள்ள இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து பலமுறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டதாகவும், அந்நாட்டின் பசிபிக் கடல் பகுதியில் சுனாமி எச்சரிக் அறிவித்து, பின்னர் திரும்பப்பெற்றதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மீட்பு மற்றும் பேரிட நிவாரணப் படையினர் களமிறங்கி மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் முழுக்கவனம் செலுத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 272 ஆக உயர்ந்து உள்ளது. 2,500-க்கும் அதிமானவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரது நிலைமை மோசமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்ற அஞ்சப்படுகிறது.