சென்னை ஐஐடியின் மாணவர் அமைப்புகளின் ஒன்றான அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டம் என்ற அமைப்பு மத்திய அரசின் கொள்கைகள், பிரதமர் மோடியின் செயல்பாடுகள், மாட்டிறைச்சிக்கு தடை போன்ற விவகாரங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக கூறி அந்த அமைப்பை ஐ.ஐ.டி. நிர்வாகம் தடை செய்தது. இந்த தடையை எதிர்த்து திருச்சியில் பிரதமர் மோடியின் உருவபடத்திற்கு செருப்பு மாலை அணிவித்து திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி மாணவர் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களின் அமைப்புகள், மற்றும் முக்கிய அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று திருச்சி சட்டக் கல்லூரி வளாகம் முன்பு கூடிய சட்டக்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு மத்திய அரசின் மாணவர் விரோத போக்கை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் மாணவர்கள், பிரதமர் மோடியின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தனர். திருச்சி சட்டக்கல்லூரி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கிளை அமைப்பாளர் சுந்தர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர் மோடியின் உருவபடத்திற்கு செருப்பு மாலை அணிவித்த விவகாரம் திருச்சி மட்டுமின்றி நாடு முழுவதையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மாணவர்களின் இந்த செயலுக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் சிவசேனா கட்சிகள் கண்டித்துள்ளன.