இலங்கையில் பொதுவாக்கெடுப்பை ஐநாவே நடத்த வேண்டும். மேலும் இலங்கைப்பிரச்சனைக்கு தனித் தமிழீழமே ஒரே தீர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று காலை ஐ.நா அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்று சேர்ந்து திடீர் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்குள் இன்று காலை 11 மணியளவில் திடீரென உள்ளே புகுந்த தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், அங்கு பறந்து கொண்டிருந்த ஐநா சபை கொடியை கீழே இறக்கி கிழித்துப்போட்டதால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி ஐ.நா அலுவலகத்தின் உள்ளே சென்று அலுவலகத்தின் வாயிற்கதவை பூட்டு போட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் வாயிற்கதவு பூட்டப்பட்டிருந்ததால், செய்வதறியாது திகைத்து நின்றனர். பின்னர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பூட்டை திறந்து உள்ளே சென்று போராட்டம் நடத்திய மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இந்த போராட்டம் குறித்து பேசிய போராட்டக்குழு தலைவர் பிரபாகரன் பேசும்போது “ஐநாவுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுக்கவே இன்றைய போராட்டத்தினை முன்னெடுத்தோம். இலங்கைத் தமிழர்களுக்கு நீதி வேண்டி தமிழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் உறுதியான போராட்டங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐநா அமர்வுகளில் நிச்சயம் எதிரொலிக்கும். எங்களது உறுதியான நிலைப்பாடுகளை பலமுறை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லிவிட்டோம். அதற்கேற்ப ஐநா சபை நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் எங்களின் போராட்டம் தொடரும்” என்றார்.