மாணவர்கள் நலனை விட டாஸ்மார்க் வருமானம் முக்கியமா? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டிப்பு
டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் மாணவா்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
திருப்பூா் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள சேடபாளையம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைந்துள்ளது. மதுபானக்கடையின் அருகில் பள்ளிக்கூடம் உள்ளதால் கடையை அகற்றக்கோரி அப்பகுதியினா் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதுபானக்கடை உரிமையாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞா், பள்ளிக்கூடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டா் தொலைவில் தான் மதுபானக்கடை உள்ளது. இருப்பினும் மாணவா்களின் நலன் கருதி மதுபானக்கடையை திரையிட்டு மறைத்து வைத்து தான் விற்பனை நடைபெறுவதாக தெரிவித்தார்
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பெங்களூருவில் மாணவா்கள் மதுபானத்தை தண்ணீா் பாட்டிலில் எடுத்துவந்து அருந்தியது கண்டறிப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டினா். மதுபானக்கடை திரையிட்டு மறைக்கப்பட்டிருந்தாலும் மாணவா்களின் கவனம் திசைதிரும்ப வாய்ப்புள்ளது.
மதுபானத்தால் கிடைக்கக்கூடிய வருமானத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், மாணவா்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அதிகாரி ஒருவரை நியமித்து சம்பந்தபட்ட கடையை ஆய்வு செய்து மக்களுக்கும், மாணவா்களுக்கும் பாதிப்பில்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்