சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை மெட்ராஸ் இயக்குனர் ரஞ்சித் இயக்கவுள்ளார் என்ற செய்தி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் இந்த படத்தை ரஞ்சித் இயக்கக்கூடாது என சூர்யாவின் தயாரிப்பாளர் ரஞ்சித்துக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.
மெட்ராஸ் படத்தை முடித்தவுடன் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்க ரஞ்சித் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படம் சூர்யா தற்போது நடித்து கொண்டிருக்கும் 24′ படத்திற்கு பின்னர் ஆரம்பிக்கவுள்ளதாக இருந்தது.
இந்நிலையில் ரஜினி படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததால், அவர் அந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் தற்போது பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திடம் இருந்து ரஞ்சித்துக்கு தங்கள் படத்தை இயக்கி முடித்த பின்னர்தான் ரஜினியின் படத்தை இயக்க ரஞ்சித் செல்லவேண்டும் என நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தை ரஞ்சித் சமாளிப்பாரா? அல்லது ரஜினி படத்தை கைவிடுவாரா? என்பதை அறிய கோலிவுட் ஆவலுடன் காத்திருக்கின்றது.