கனடாவில் படிப்பது நல்லதா?

images (2)

நல்ல தரமான கல்வி, நிரந்தர தங்குதலுக்கான அதிகபட்ச வாய்ப்புகள், கல்விக்கான குறைந்த கட்டணம் உள்ளிட்டவை, உயர்கல்விக்காக கனடாவை நோக்கிச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன.

கடந்த 2008ம் ஆண்டில், கனடாவில் உயர்கல்வி படிக்க விரும்பிய இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 3000 மட்டுமே. ஆனால், தற்போது, அந்த எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனைப் போல, கனடாவும், சர்வதேச மாணவர்கள் விரும்பும் ஒரு நாடாக பரிணமித்துள்ளது.

கனடாவை விரும்ப காரணம்?

கனடாவில் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருக்கும் என்று இங்கிருந்து சென்ற அனுபவஸ்தர்கள் கூறுகிறார்கள். இந்தியாவிலிருந்து செல்லும் பெரும்பாலான மாணவர்கள், தங்களின் முதல் இலக்காக, அமெரிக்கா மற்றும் பிரிட்டனையே வைத்துள்ளார்கள் என்று எண்ணுவது தவறு. பலரின் முதல் தேர்வு கனடாவாக இருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

ஏனெனில், அங்கே உலகத்தரம் வாய்ந்த பல்கலைகள், அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதுதவிர, இக்கட்டுரையின் முதல் பகுதியிலேயே கூறிய காரணங்களுடன், எளிமையான குடியேற்ற விதிகளும், கனடாவை நோக்கி ஈர்க்கப்படுவதற்கு முக்கிய காரணிகள்.

படிப்புகள்

இளநிலைப் படிப்புகள், 3 முதல் 4 ஆண்டுகள் வரையான காலகட்டத்தைக் கொண்டவை. ஒரு மாணவர், இளநிலைப் பட்ட சான்றிதழைப் பெறுவதா அல்லது டிப்ளமோ சான்றிதழைப் பெறுவதா என்பதை முடிவுசெய்து கொள்ளலாம். மேற்கண்ட 2 படிப்புகளுக்கும் இடையேயான வித்தியாசம் காலஅளவுதான்.

கனடாவில் வழங்கப்படும் முதுநிலைப் படிப்புகள், சர்வதேச மாணவர்கள் மத்தியிலே புகழ்பெற்று விளங்குகிறது. எம்.ஏ. மற்றும் எம்.எஸ்சி. நிலையில் பல்வேறான படிப்புகள் வழங்கப்படுகின்றன. கனடாவின் முதுநிலைப் படிப்பானது, பொதுவாக, 12 மாதங்கள் காலஅளவு கொண்டது. அதேசமயம், பல்கலையைப் பொறுத்து காலஅளவு மாறுபடும்.

எம்.பி.ஏ. படிப்பிற்கும், கனடா, ஏற்றதொரு நாடாக திகழ்கிறது.

விசா விதிமுறைகள்

கனடாவின் எளிய விசா விதிமுறைகள், அந்நாட்டை நோக்கி, சர்வதேச மாணவர்கள் கவரப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம். கனடாவின் அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனத்தில் படித்து வெளியேறும் ஒரு வெளிநாட்டு மாணவர், அவரது படிப்பினுடைய காலஅளவிற்கு(அதிகபட்சம் 3 ஆண்டுகள்) சமமாக, work visa பெற முடியும். இதுபோன்ற பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.

கனடாவில் கல்வி கற்கும் ஒருவர், அந்த நாட்டில் குடியேறும் வாய்ப்பை, அதிக சிரமங்களை சந்திக்காமல் பெறலாம் என்பது கல்வி ஆலோசகர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது.

Leave a Reply