சென்னையில் பறக்கும் ரயில் தடம் புரண்டதால் பெரும் பரபரப்பு
சென்னை கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே இன்று மதியம் பறக்கும் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரிக் ஒவ்வொரு கால் மணி நேரத்திற்கு ஒருமுறை பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் அதிகளவிலான அளவில் பயணிகள் கூட்டம் காணப்படும்.
இந்நிலையில், வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு இன்று மதியம் 12.45 மணிக்கு பறக்கும் ரயில் புறப்பட்டு சென்றது. கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் மிதமான வேகத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து நடந்தவுடன் பயணிகள் அவசரம் அவசரமாக ரயிலில் இருந்து குதித்தனர். இந்த விபத்தால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது ஆறுதலான விஷயம்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடம்புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாகவும், விபத்திற்கான காரணம் விரைவில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.