”நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ரஜினி கூறாதது ஏன்? சுப வீரபாண்டியன்
வரும் சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து அக்கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று தெளிவாக கூறிய ரஜினி, வரும் 2019ஆம் ஆண்டு வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து அப்போது முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார். எனவே ரஜினி, பாஜகவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற தேர்தலில் முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய ‘திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை’யின் தலைவர் சுப.வீரபாண்டியன், ”’எப்போது வரும் என்பது தெரியாத சூழலில் இருக்கும் சட்டமன்றத் தேர்தல்குறித்து தனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக அறிவித்திருக்கும் ரஜினி, நாடாளுமன்றத் தேர்தல்குறித்து மட்டும் அப்போதைய சூழலில் அறிவிப்பேன் என்றிருக்கிறார். எனவே, ஒவ்வொன்றிலும் அவரது நிலைப்பாடு வெவ்வேறாக இருக்கின்றன’ என்று கூறினார்
மேலும் ”நேர்மையான அரசியலைத்தான் ‘ஆன்மிக அரசியல்’ என்று குறிப்பிடுவதாக அவர் விளக்கம் சொல்லியிருக்கிறார். அதுதான் உண்மையான செய்தி என்றால், சொல்லுகிறபோதே ‘நேர்மையான அரசியல்’ என்று சொல்லியிருக்கலாம். ‘ஆன்மிக அரசியல்’ என்கிற சொல்லுக்கு வேறு பொருளே கிடையாது என்று கருதுபவராக ரஜினி இருக்கமுடியாது. எனவே, முதலில் அந்தச் சொல்லை சொல்லிப் பார்ப்பதுவும், அதற்கு எதிர்ப்பு என்கிற நிலை வரும்போது வேறொரு விளக்கம் தருவதுமாக அவரது நிலை இருக்கிறது. இவ்வாறு சுப வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்