சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பதவியேற்க சட்டரீதியான எந்தவித தடையும் இல்லை என பாஜகவின் முக்கிய தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ‘‘‘சட்டப்படி ஜெயலலிதா இப்போது பதவி ஏற்கலாம். ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் ஏதாவது விபரீதமா தீர்ப்பு வழங்கினால்.. அப்போதுதான் பிரச்னை! தீர்ப்பு எதிராக வந்தால், ஜெயலலிதா மீண்டும் பதவி இறங்க நேரிடும். ஒருவேளை, அவர் இப்போது பதவி ஏற்றாலும்கூட, பிறகு ராஜினாமா கடிதம் கொடுத்துட்டு வெளியே போக வேண்டிவரும். இதுமாதிரி சந்தர்ப்பம் அவருக்கு ஒண்ணும் புதுசு இல்லையே?’’ என்று கூறியுள்ளார்.
மேலும் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு குறித்து கூறும்போது, “தீர்ப்பில் கணக்கு ரீதியான பிழை இருக்கிறது. வருமானத்துக்கு மேலே ஜெயலலிதா சொத்து சேர்த்திருக்காங்க என்பதை நீதிபதி குமாரசாமி ஒப்புக்கொள்கிறார். பழைய ஊழல் தடுப்புச் சட்டத்தை உதாரணம் காட்டி, ‘மொத்த வருமானத்தோட கம்பேர் பண்ணும்போது, அது 10 சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் சொத்து சேர்த்திருக்கார். அது பெரிய விஷயமில்லை. இந்த ஒரு காரணத்துக்காகவே விடுதலை பண்ணினேன்’னு சொல்கிறார். அந்தச் சட்டம் 1977-ல் இருந்தது. 1988-ல் அந்தச் சட்டத்தையே ராஜீவ் காந்தி மாற்றிவிட்டார். புதுசா கொண்டுவந்த சட்டத்துல, அந்த 10 சதவிகிதம் போன்ற எந்த ஷரத்தும் இல்லை. ஆக, நடைமுறையில் இல்லாத ஒரு சட்டத்தைத் தனது தீர்ப்பில் நீதிபதி ஏனோ குறிச்சிருக்கார். தீர்ப்பின் இந்தப் பகுதி உச்ச நீதிமன்றத்தில் நிச்சயமா எடுபடாது. நான் இதை முன்வைத்து வாதாடுவேன். தீர்ப்பில் இதுதான் பெரிய குறை’’